திராவிட நாட்டிற்கு 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா' என்று பெயர் வைத்த நெட்டிசன்கள்
- IndiaGlitz, [Tuesday,May 30 2017]
மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சி தடை சட்டத்தால் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட போகிறதோ தெரியாது. ஆனால் இந்த சட்டத்தால் தென்னிந்தியர்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்பது மட்டும் உண்மை. குறிப்பாக தமிழக மக்களும் கேரள மக்களும் மத்திய அரசுக்கு எதிராக ஒரே குரலில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டம் குறித்த தகவல் வந்தவுடன் நெட்டிசன்கள் கொந்தளித்தனர். எங்களுக்கு இந்தியா தேவையில்லை. திராவிட நாடு என்ற பெயரில் தென்னிந்தியா, தனி நாடாக ஆகும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் 'திராவிட நாடு' என்ற தமிழ் ஹேஷ்டேக் இந்திய அளவில் பலமணி நேரம் டிரெண்ட் ஆனது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், 'திராவிடநாடு என்ற வார்த்தை டுவிட்டரில் டிரெண்டிங் ஆவதை பாஜக சாதாரண விசயமாகக் கருதக்கூடாது. இது வெறும் தொடக்கம்தான். மதவாத கருத்துகளையும், இந்துத்துவா சிந்தனைகளையும் அமல்படுத்துவதை பாஜக இனி கைவிட வேண்டும். அதற்கான எச்சரிக்கையே திராவிட நாடு டிரெண்டிங்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் தற்போது மீண்டும் தென்னிந்தியாவை ஒருங்கிணைத்து 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா' என்று பெயர் சூட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக 'USSI' என்று பதிவிட்டு வருகின்றனர். ஒரே ஒரு சட்டம் நாட்டையே துண்டிக்கும் அளவுக்கு பெரிதாகி வருவதால் இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.