close
Choose your channels

வாழை'யை சொல்லி கோழைகளாக்க வேண்டாம்.. மாரி செல்வராஜுக்கு பிரபல அரசியல் தலைவர் கோரிக்கை..!

Thursday, August 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இம்மண்ணின் பூர்வீக குடிமக்களைப் பெருமைப்படுத்த முடியாமல் போயிருக்கலாம்.! ஆனால் சிறுமைப்படுத்தி இருக்கக் கூடாது.! போராட்ட உணர்வுகளை கூர்மைப்படுத்தாமல் போயிருக்கலாம்!! ஆனால், அழவைத்து அனுதாபம் தேடி உணர்வுகளை மழுங்கடிக்க முயற்சித்திருக்கக் கூடாது.! ’வாழை’யை சொல்லி கூலிகளாக - கோழைகளாக்க வேண்டாம்.!!

கலைகள் ‘காலத்தின் கண்ணாடிகள்’ என்று கருதப்பட்ட காலம் உண்டு. ஆயக்கலைகள் 64 என்பதில் பல மறைந்து கலைகளின் ஒட்டுமொத்த வடிவமாக இன்றைய காலகட்டத்தில் ’சினிமா’ உருவெடுத்துவிட்டது. துவக்கத்தில் திரைப்படங்கள் புராணங்களையும் வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. பின், சமூக அவலங்களும்; அதற்கு எதிரான தனி மனித அல்லது மக்கள் போராட்டங்களும் சுட்டிக் காட்டப்பட்டன.

நாளடைவில் சாதிய தூக்கல்கள், அரிவாள் கலாச்சாரம், ஆபாசங்கள் திரைத்துறையின் பிரிக்க முடியாத அங்கங்கள் ஆயின. பொழுதுபோக்கு என்று துவங்கிய திரைத்துறையால் ஈர்க்கப்பட்ட இளைஞர் கூட்டம் நிஜத்திற்கும் நிழலுக்கும் வேறுபாடு தெரியாமல் சினிமாவால் மதி மயங்கி போயினர்.

சமூக அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக சமூக பேதங்களை ஒழித்துக் கட்ட போராடியவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, போராளிகளின் வேடமிட்டவர்களே புரட்சியாளர்களாகவும் தலைவர்களாகவும் போற்றப்படும் பிற்போக்குத்தனம் உருவெடுத்தது. சினிமா போதைப் பொருட்களை மிஞ்சிய போதை வஸ்தாயிற்று;

நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் கோயில் கட்டுதல், பாலபிஷேகம் செய்யும் மடமைத்தனங்கள் உருவாகின. இளைஞர்களின் பலகீனங்களைப் புரிந்து கொண்டவர்கள் திரைத் துறையை சாதிய, மத, அரசியல் போதையை ஏற்றுவதற்கான களமாக்கிக் கொண்டார்கள். 1993-94 களில் வெளியான ஒரு திரைப்படப் பாடல் தென் தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்குக் காரணமாயிற்று. அதன் பின்னர் பல சமூகங்கள் தன்நிலை உணர்ந்து வீறு கொண்டு எழுந்தன.

எம்.ஜி.ஆர் அவர்கள் ’படகோட்டி’ படத்தில் மீனவர்களின் துயரங்களை எடுத்துக்காட்டியது மட்டுமின்றி, அவர்கள் சுரண்டப்படுவதையும் திரையில் காட்டி அதற்கு எதிராகக் களத்திலும் நின்று அவர்களைக் கவர்ந்தார். எம்.ஜி.ஆரின் அரசியலுக்கு அடித்தளமாக இருந்தது அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களே.

எந்த வெற்றி படைப்பாளிகளும் தங்கள் வலிகளைச் சொல்வதால் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. சக மனிதர்களின் வலிகளைச் சொல்வதாலும், அதற்கான காரணிகளைக் களைவதற்காகக் களத்தில் நிற்பதாலும் தான் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்!

இந்தியச் சமுதாயம் வர்க்கத்தால் மட்டும் அல்ல; சாதிகளாலும் பிளவுண்டு இருக்கிறது. சாதி ரீதியாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வரலாற்றில் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக இருந்தவர்கள்; இம்மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் வளர்ந்த பிறகு முதலாளிகள் - தொழிலாளர்கள் முரண்பாட்டின் விளைவாக அங்கு ’பொதுவுடைமை புரட்சிகள்’ ஏற்பட்டன. இந்தியாவின் சாதிய - சமூகத் தன்மையைச் சரியாகப் புரியாத காரணத்தினாலே தான் இம்மண்ணிலே ’பொதுவுடைமை கட்சிகள்’ தோற்றுப் போயின.

1968 ஆம் ஆண்டு கீழவெண்மணியில் உயிர் நீத்த 43 பேரையும் ’கூலித் தொழிலாளிகள்’ என்று முத்திரை குத்தி, அப்போராட்டத்தை முன்னின்று நடத்திய ’தேவேந்திரகுல வேளாளர்’ அடையாளத்தை அழித்ததையே இன்றுவரை நாம் கடுமையாகச் சாடி வருகிறோம். ஒரு போராட்டத்தின் உண்மைத் தன்மையையும், போராடியவர்களின் வரலாற்றையும் மூடி மறைப்பது வரலாற்றுப் பிழையாகும்.!

எத்தனையோ சமூகங்கள் பல ஒடுக்கு முறைகளுக்கு இன்றும் ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அந்த சமூக கொடுமைகளை எதிர்த்து நின்றுப் போராடியவர்கள் யார்? என்பதை அடையாளப்படுத்துவதற்குத் துணிவில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் உண்மைக் கலைஞர்களாக இருக்க முடியாது. அவர்களுக்கு, சில முத்திரைகள் விழும் தான்; அதை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.!

எந்த ஒரு சமூக அமைப்பிலும் பிரதான முரண்பாடுகளின் மோதலால் தான் சமுதாயத்தில் மறுமலர்ச்சியும், அதன் மூலம் முன்னேற்றமும் ஏற்படுகிறது. உலக அளவில் முதலாளி - தொழிலாளி முரண்பாடுகளால் தான் பொருளாதார சமத்துவ தேசங்கள் உருவாகின. இந்திய சமூகம் அரை நில பிரதிநிதித்துவ சமுதாயம். இங்கு மண்ணுரிமைக்கான; சமூக மதிப்பு - மரியாதை, சமூக அடையாளத்திற்கான; சுய கௌரவத்திற்கான போராட்டங்களே முன்னுரிமை வகிக்கின்றன. தங்களது இழந்த அடையாளங்களை மீட்க எவ்வித உயிர்த் தியாகங்களையும் செய்ய தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ள மக்கள் திரள் சமுதாயம் இது.

1957 ஆம் ஆண்டு தியாகி இமானுவேல் தேவேந்திரனார் படுகொலை, 1968 கீழவெண்மணி சம்பவம், 1980-81 புளியங்குடி அய்யாபுரம் நிகழ்ச்சிகள், போடி மீனாட்சிபுரம் நிகழ்ச்சிகள், 1995 கொடியங்குளத்தில் ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள்; அதனால் முற்றிய முரண்பாடுகள் தான் தென் தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளை புரட்டிப் போட்டன.!

”காளையின் கழுத்தில் எதை வைத்தாலும் சுமக்கும்” என்ற மன நிலை தவறானது. தோளில் திணித்ததைத் தூக்கிப்போட்டு வெகு காலம் ஆகிவிட்டது. 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரக் கிராமங்கள் காவல்துறையின் கொடூர தாக்குதலுக்கு ஆளான போது தென்தமிழகத்திலிருந்த ஒவ்வொரு தேவேந்திர குல வேளாளர் இல்லங்களிலும் உலை மட்டும் கொதிக்க வில்லை; உள்ளங்களும் சேர்ந்தே கொதித்தன. சுந்தரலிங்கம் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூக சுதந்திரப் போராட்ட தியாகியுடைய பெயர் ஒரு போக்குவரத்துக் கழகத்திற்குச் சூட்ட முடியாத போது தென் தமிழகத்தில் தமிழகமே கண்டிராத எழுச்சியும் போராட்டமும் ஓங்கிற்று.!

ஒரு படைப்பாளி தனது வலிகளைப் பதிவு செய்வது என்பது வேறு; அதை அவன் சார்ந்த சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்வது என்பது வேறு.! தனது வலிகளை சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்கின்ற பொழுது அல்லது வலிந்து தனது வலியை இந்த சமூகத்தில் விதைக்கின்ற போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.!

நகரங்களிலும் கிராமங்களிலும் பேசப்படும் ’நல்ல தங்காள்’ கதை மிகவும் உருக்கமானது தான்; ஆனால், அதன் சாராம்சம் தற்கொலையைத் தூண்டக் கூடியது. தமிழகத்தில் 1968-களில் நூற்றுக்கணக்கான நூற்பாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பாக அதிக போனஸ்கள் கேட்டு நூற்பாலைகளில் வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டது உண்டு. அந்த காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் - முதலாளிகளுக்கு இடையே இருந்த முரண்பாடுகள், போராட்டங்களைச் சுட்டிக்காட்டி ’துலாபாரம்’ என்ற திரைப்படம் வெளிவந்தது.

அதில் இடம்பெற்ற ”பூஞ்சிட்டுக் கண்ணங்கள்” எனத் துவங்கும் பாடல் கணவன் உயிரோடு இருந்தபோது மகிழ்ச்சியாகப் பாடுவதாகவும், கணவன் தொழிற்சங்க போராட்டத்தில் கொலையுண்டதால் பட்டினி கிடக்க நேர்ந்து சோகமாகப் பாடுவதாகவும் அமையும்.! அந்த படத்தைப் பார்த்தும், பாடலைக் கேட்டும் கண்ணீர் சிந்தாதவர்கள் எவருமே கிடையாது. படம் அனைத்து இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆனால், சமூகத்தில் என்ன நடந்தது? அதற்குப் பிறகு தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்கள் மெல்ல மெல்ல நீர்த்துப் போயின. எனவே சினிமா திரைப்படங்கள் சமூகத்தில் எழுச்சியை உண்டாக்கும்; அதே போல எழுச்சியை நீரூற்றியும் அணைக்கும்.!
இரட்டை டம்ளர், இரட்டை சுடுகாடுகள், கோவில் நுழைவு மறுப்புகள் என தமிழகத்தில் பன்னெடுங்காலம் நிலவி வந்த ஆதிக்க சம்பவங்களை தென் தமிழக எழுச்சியே தவிடுபொடியாக்கி இருக்கிறது.! அது கூலி கொடுப்போர் - கூலி வாங்குவோர் என்ற முரண்பாடுகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது அல்ல. ”இந்த மண்ணின் மூத்த குடிமக்கள் நாங்கள், இந்த மண்ணை ஆண்ட பரம்பரை நாங்கள்” என்று வீறு கொண்டு எழுந்ததால் ஏற்பட்ட சமூக மாற்றம்.!

பூர்வ குடி சமூகத்தின் இந்த எழுச்சியை மறுக்கக் கூடியவர்கள் வேண்டுமென்றால் இவ்வுண்மையை மறைக்க நினைக்கலாம்! ஆனால், இந்த எழுச்சியின் காரணமாகத்தான் தங்களுக்கும் இந்த சமூகத்தில் ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது என உணர்ந்தவர்கள் மறைக்க நினைக்கக் கூடாது.! அனைத்து மக்களும் பொருளாதாரத்தில் சமமாக வளர்ந்து விட்டார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், உணர்வால் உயர வளர்ந்திருக்கக் கூடிய ஒரு சமுதாயத்தை மீண்டும் தாழ்த்தி தரை தட்ட வைக்கக் கூடாது.

இந்திய சமுதாயம் மிகவும் பொல்லாத சமுதாயம்! சாதி வெறுப்பை ஒவ்வொரு அணுவிலும் பொத்தி வைத்திருக்கக்கூடிய சமூகம்! எளிய மக்களுக்கு ஏற்படும் சிறு சிறு துன்பங்களையும் துயரங்களையும் கண்டு கண்ணீர் சிந்தும் சமுதாயம் அல்ல! எனவே இம்மண்ணின் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை படம் போட்டுக் காட்டி யாருடைய அனுதாபங்களையும், அதன் மூலம் வசதிகளையும் தேட முயலக் கூடாது.!

1968 ஆம் ஆண்டு கீழவெண்மணியில் 43 ஆண்கள், பெண்களை தீயிட்டுக் கொளுத்திய போது தப்பித்துச் சென்ற குழந்தைகளைக் கூட பிடித்து வந்து நெருப்பிலே போட்டு எரித்ததை வேடிக்கை பார்த்த சமுதாயம் தான் இது.! 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மண்ணுரிமைக்கான போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தாமிரபரணியின் கீழ் கரையிலிருந்து நீந்தி மேல் கரைக்குச் சென்றவர்களைக் கூட தப்பிக்க விடாமல் காலால் மிதித்தும், தடியால் தாக்கியும், கற்களைக் கொண்டு எறிந்தும் 17 தொழிலாளர்களின் உயிரை எடுத்த சமுதாயம் தான் இது.! எனவே இம்மக்களை உயிரோடு எரித்துக் கொல்வதையும், நீரிலே அமுக்கிக் கொல்வதையும் கூட தவறாகவோ பாவமாகவோ கருதாத சமூகமா? ”இரு வாழைத்தார்களைச் சுமந்து செல்லும் சிறார்கள் மீது இரக்கம் காட்டப் போகிறது?”

இன்று தமிழகத்தில் பூர்வ குடி மக்கள் எய்தியிருக்கக்கூடிய சுதந்திரத்தைப் பெற எவ்வளவோ கண்ணீர் என்றோ வடிக்கப்பட்டு விட்டது.! சிந்த வேண்டிய ரத்தங்களும் என்றோ சிந்தப்பட்டுவிட்டது.!! எஞ்சி இருக்கக்கூடிய அடக்கு முறைகளையும், ஆதிக்கத்தையும், சுரண்டலையும் மீண்டும் வெகுண்டெழும் போராட்டங்களின் மூலமாகவும், அரசியல் அதிகாரத்தை அடைவதன் மூலமாகவும் மட்டுமே அடைய முடியுமே தவிர, எவருடைய அனுதாபங்களையும் தேடி - கண்ணீரை வரவழைத்து அல்ல.!

தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் வாழும் தேவேந்திர குல வேளாளர்களே இன்றும் சிறு நில உடைமையாளர்களாக இருக்கிறார்கள். எந்தவொரு சிறு அல்லது நடுத்தர விவசாயியும் தன்னுடைய நிலத்திலும் உழவு செய்வான்; அண்டை விவசாயி நிலத்திலும் உழவும் செய்வான்; களை எடுக்கவும் செய்வான்; நெல்லையும் அறுப்பான்; வாழையும் சுமப்பான்.! அதுவே அடிமைத்தனமும் அல்ல.! சுரண்டலின் மொத்த வெளிப்பாடும் அல்ல!

புளியங்குளம் ’கூலிக்காரர்கள்’ என்ற அடையாளத்தை தாங்கியது அல்ல.! தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் தோன்றிய ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத்திற்கு முற்பட்ட ”இன்றைய புளியங்குளம், அன்றைய ஆதிச்சநல்லூர்” பண்டைய தமிழ் நாகரிகத்திற்கான உரிமையுடையவர்கள்; தாமிரபரணியின் வரலாறு என்னவோ அதுதான் இத்தமிழ் மண்ணின் – தேவேந்திரகுல வேளாளர்கள் - தமிழர்களின் வரலாறு.!

நெல்லையும், வாழையையும் விளைவித்துக் கொடுத்தது தான் இம்மக்களின் வரலாறு.! அதைச் சுமந்து கொடுத்தது அல்ல இப்பூர்வீக குடிமக்களின் வரலாறு. ’வாழை’யைப் பற்றிப் பேசும் பொழுது மாபெரும் ஒரு சமுதாயத்தை ”கோழையாக்குகின்ற” வகையில் எவரின் எழுத்துக்களோ, பேச்சுக்களோ, நடிப்புக்களோ, சினிமாக்களோ அறவே கூடாது.!

தென் தமிழகத்தின் முக்கிய ஒரு கிராமத்திலிருந்து, தென் தமிழக தேவேந்திர குல வேளாளர்களின் முக்கியமான போராட்ட காலகட்டங்களில் வாழ்ந்து, இன்று திரைத்துறையில் பேசப்படக்கூடிய, போற்றப்படக்கூடிய ஒரு இயக்குநராக ஒருவர் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்; அதற்காகப் பாராட்டுகிறோம்.!

அதே சமயத்தில் தனது இழந்த அடையாளத்தை - அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம்; ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் ’கூலிக்காரர்களாகவே’ சித்தரித்துச் சிறுமைப்படுத்துகின்ற போக்கும், அவர்களின் போராட்ட உணர்வுகளையும் குணங்களையும் மழுங்கடித்து யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்துக் கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.!

எனினும், பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை.! ”தன்னைக் காட்டிலும் தனது குடும்பம் பெரிது; தனது குடும்பத்தைக் காட்டிலும் இந்த குலமும் இந்த மண்ணும் மக்களும் பெரிது” என்ற அடிப்படையில் வாழ்ந்து, என்றோ வீழ்ந்து, இன்று மீண்டும் வீறுகொண்டு எழுந்திருக்கக் கூடிய மாபெரும் சமுதாயத்தை ’வாழை’யை சொல்லி கூலிகளாக - கோழைகளாக்க வேண்டாம்.!! இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment