வியட்நாமை சூறையாடிய சூறாவளி… 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!!
- IndiaGlitz, [Friday,October 30 2020]
வியட்நாமில் கனமழைக்கு நடுவே “மோலேவே” எனும் சூறாவளி புயல் வீசி கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த சூறாவளி புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை அந்நாட்டில் 136 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகி விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
வியட்நாமில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு நடுவிலேயே சூறாவளி புயல் ஒன்று விசியதால் அந்நாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றன. பல மாகாணங்கள் தற்போது வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாதிப்பிற்கு நடுவே நூற்றுக்கணக்கான மக்கள் மாயமாகி இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
இந்நிலையில் குய்ங்னம் எனும் மாகாணத்தில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 56 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் 17 லட்சம் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களைத் தங்க வைப்பதற்காகத் தற்போது 40 ஆயிரம் தற்காலிக முகாம்களை அந்நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.
வியட்நாமில் தற்போது பெய்து வரும் கனமழை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகம் எனவும் தகவல் கூறப்படுகிறது. குய்ங்னம் மாகாணத்தில் மட்டும் தற்போது வரை 20 மீனவர்கள் மற்றும் 14 பேர் மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை சரி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.