Dora Review
'மாயா' படத்தின் வெற்றிக்குப் பின் நயன்ரா தனி நாயகியாகநடித்திருக்கும் படம் ‘டோரா’மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையிலும் நீண்ட காத்திர்ப்புக்குப் பிறகும் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் தாஸ் ராமாசாமி இயக்கியுள்ள இந்தப் படமும் பேய்ப் படம் என்றுதான் ட்ரைலர்களைப் பார்த்தவர்கள் நம்பினார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதைத் விமர்சனத்தில் பார்ப்போம்.
பவளக்கொடி (நயன்தாரா) அவளது தந்தையுடன் (தம்பி ராமையா) வாழ்கிறாள். வாடைகைக்கு விடுவதற்கு ஒரு பழைய மாடல் காரை வாங்குகிறார்கள். அந்தக் காரை வாங்கியது முதல் சில அமானுஷ்ய அனுபவங்கள் நிகழ்கின்றன.
அதே நேரத்தில் வடநாட்டுத் தொழிலாளிகள் மூவர்,. ஒரு அபார்ட்மெண்டில் புகுந்து கொள்ளையடித்து, அங்கு தனியாக இருக்கும் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று விடுகின்றனர். அந்த கொலையாளிகளைத் தேடத் தொடங்குகிறார் காவல்துறை அதிகாரி (ஹரீஷ் உத்தமன்).
தீடீரென்று கொலையாளிகள் மூவரில் ஒருவன் பவளக்கொடியின் காரால் கொல்லப்படுகிறான்.
அந்தக் கொலையாளிகளுக்கும் காரில் உள்ள அமானுஷ்ய சக்திக்கும் உள்ள தொடர்பு என்ன? மற்ற இரண்டு கொலையாளிகளும் என்ன ஆனார்கள்? பவளக்கொடிக்கும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது மீதித் திரைக்கதை.
ஹாரார்-ஃபேண்டசி-த்ரில்லர் என்ற பெயரில் விளம்பரப்படுத்தபட்டும் ’டோரா’ படத்தில் ஃபேண்டசியின் பங்கே அதிகம். ஒரு வழக்கமான பழிவாங்கல் பேய்க் கதையில் பேய்க்கு ஒரு வித்தியசமான வடிவத்தைக் கொடுத்திருப்பதன் மூலம் வேறுபடுத்திக்காட்டியிருக்கிறார்கள். ஆங்காங்கே சில ரசிக்கத்தக்க காட்சிகளைத் தூவி ஒப்பேற்றியிருக்கிறார்கள்.
முதல் பாதி பெருமளவில் பார்வையாளர்ளின் கவனத்தைத் தக்கவைகக்த் தவறுகிறது. நயன்தாரா- தம்பி ராமையா காட்சிகளில் புதுமை ஒன்றும் இல்லை. தம்பி ராமையா காமடி என்ற பெயரில் செய்யும் விஷயங்களுக்கு ஒரு இடத்தில்கூட சிரிப்பு வரவில்லை. கார் நயன்தாராவிடம் வந்துசேருவது கதையின் மிக முக்கியச் சரடு. அது ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதில் நம்பகத்தன்மை இல்லை. ஹரீஷ் உத்தமனின் கொலை விசாரணைக் காட்சிகள் ஓரளவு கவனித்துப் பார்க்க வைக்கின்றன.
இடைவேளைப் பகுதியில் நடக்கும் சம்பவங்களும் அவை காட்சிப்படுத்தப்பட்ட விதமும் ரசிக்கவைத்து இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்பார்க்கவைக்கின்றன.
இரண்டாம் பாதியில் பேயின் பின்கதையும் பழிவாங்கலுக்காக சொல்லப்படும் காரணமும் வழக்கமானதுதான். வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே குற்றத்தால் பாதிக்கப்பட்டவராக ஒரு சிறுமியைக் காட்டியிருக்கிறார்கள். ஃப்ளாஷ்பேக் முடிந்தபின் சூடுபிடிக்கும் படம் ஓரளவு சுவாரஸ்யமாகவே நகர்கிறது. ஆங்காங்கே சில ரசிக்க வைக்கும் காட்சிகள் வந்து போகின்றன. குறிப்பாக ஹரீஷ் உத்தமன் நயன்தாராவை காவல்நிலையத்துக்கு இழுத்து வரும் காட்சியும் அதிலிருந்து நயன் தப்பிக்கும் விதமும் திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகின்றன. இரண்டாவது குற்றவாளி கொல்லப்படும் விதம் சுவாரஸ்யமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.
என்னதான் ஃபேண்டசி படம் என்றாலும் கதையில் லாஜிக் சறுக்கல்கள் பல இடங்களில் உறுத்துகின்றன. நயன்தாரா ஒரு குறிப்பிட்ட இடத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ள, கார் விற்பனைக் கடையின் சிசிடிவி கேமரா பதிவுகளை மிக எளிதாகப் பெறுவது, ஓடும் காரிலிருந்து கீழே விழுந்து உருண்டுகொண்டே தப்பிப்பதெலாம் காதில் பூ சுற்றும் வேலை. கிளைமேக்ஸ் காட்சியில் என்ன நடக்கும் என்று முன்பே தெரிந்துவிடுவதால் அளவு கடந்து நீடிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
நயன்தாரா நடிப்பைப் பற்றி குறை சொல்ல முடியாது என்ற நிலையை அடைந்துவிட்டார். அவருக்கென்று ஒரு சில மாஸ் காட்சிகள் உள்ளன. அவற்றில் சிறப்பாக உள்வாங்கி நடித்து பொருத்தமான உடல்மொழியைக் கச்சிதமாகக் கொண்டுருகிறார். ஆனால் படம் முழுக்க அவர் பேசும் தமிழில் தேவையற்ற குழந்தைத்தனம் பாத்திரத்துக்குப் பொருத்தமில்லாமல் உள்ளது.
தம்பி ராமையா காமடியில் கடுப்பேற்றினாலும் ஒரு சில எமோஷனல் காட்சிகளில் வழக்கம்போல் ஸ்கோர் செய்கிறார். ஹரீஷ் உத்தமன் மிடுக்கான போலீஸ் அதிகாரியைக் கண் முன் நிறுத்துகிறார்.
விவேம்-மெர்வின் இணையரின் பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலம். பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இசைக்கான ஸ்கோப்பை உணர்ந்து சிறந்த இசையைத் தந்திருக்கின்றனர். திரைக்கதைப் போக்கிலேயே பயணிக்கும் பாடல்களும் தேறிவிடுகின்றன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் குறையில்லை. கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில், நயன்தாராவின் நடிப்புக்காகவும் சில மாஸ் காட்சிகளுக்காகவும் ஓரளவு விறுவிறுப்பான இரண்டாம் பாதிக்காகவும் ‘டோரா’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
- Read in English