கொரோனா வந்தும் அல்ட்ராசிட்டிக்கு பஞ்சமில்ல…. அதிபர் ட்ரம்பின் செயலால் அதிர்ச்சி!!!
- IndiaGlitz, [Tuesday,October 06 2020]
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சிகிச்சைக்கு நடுவிலேயே, மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே காரில் உலா வந்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று வெள்ளை மாளிகை வந்த அதிபர் அங்கு முகக்கவசம் அணியாமல் இருந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவிற்கு கடந்த 2 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப் பட்டது. அதைத்தொடர்ந்து இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தாலும் பின்பு தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வயது மூப்பு மற்றும் உடல் எடை காரணமாக அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்திய நிலையில் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
அந்த மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து நல்ல உடல்நலத்துடன் வெள்ளை மாளிகைக்கு அதிபர் திரும்பி சென்றார். மேலும் வெள்ளை மாளிகையில் வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் ட்ரம்ப். வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்டேட்லே பால்கனியில் இருந்து அதிபர் பேச ஆரம்பிக்கும்போதே முகக்கவசத்தை கழட்டி பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இணையத்தில் அதிபர் ட்ரம்ப் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அவரால் மேலும் பலர் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தச் செயலைத்தான் தற்போது அதிபர் செய்திருக்கிறார் எனப் பலரும் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.