வெள்ளை மாளிகையை விட்டு கிளம்பும்போது மன்னிப்பை வாரி வழங்கும் டிரம்ப்? சம்பந்திக்கும் சகாயமா???
- IndiaGlitz, [Thursday,December 24 2020]
கடந்த நவர்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவை அந்நாட்டு தேர்தல் குழு அறிவித்து விட்டது. ஆனால் இந்த முடிவை இன்னும் ஒப்புக்கொள்ளாத டிரம்ப் தொடர்ந்து நீதிமன்றங்களை நாடி வருகிறார். இந்நிலையில் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறேன் என டிரம்ப் ஒருவழியாக ஒப்புக் கொண்டு விட்டார்.
ஆனால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தனக்கு வேண்டியவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் டிரம்ப் ஈடுபட்டு வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தப்பித்தல் நடவடிக்கையில் அவருடைய சொந்த சம்பந்தியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே டிரம்ப் தனக்கு வேண்டியவர்களை காப்பாற்றும் வேலையை ஆரம்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த லிஸ்டில் இருப்பவர்கள் யார் யார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
முதலில் டிரம்ப்பின் சம்பந்தி சார்லஸ் குஷ்னர். இவர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பின் மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகராக இருந்த இவர் வரி ஏய்ப்பு, பிரச்சார நிதி சார்ந்த குற்றங்கள் மற்றும் விசாரணையில் சாட்சிகளை கலைத்தல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கி இருக்கிறார். மிகப்பெரிய பணக்கார முதலாளியான இவரை அனைத்துக் குற்ற வழக்குகளில் இருந்தும் டிரம்ப் விடுவித்து காப்பாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்து தேர்தல் பிரச்சார மேலாளர் பால் மனாஃபோர்ட். டிரம்ப் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றபோது அதில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது எனப் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றவழக்கில் குற்வாளியாக நிரூபிக்கப்பட்ட பால் மனோஃபோர்ட்டிற்கு ஏழரை வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை அடுத்து சிறையில் இருந்த அவர் கடந்த மே மாதம் கொரோனா தாக்கம் காரணமாக வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டார். தற்போது டிரம்பின் தலையீட்டால் அந்த வீட்டுச்சிறையில் இருந்து பால் தப்பிக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன். இவர் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டில் சிக்கிக் கொண்டார். டிரம்ப் இவரை கடந்த நவம்பர் மாதமே அந்த வழக்கில் இருந்து விடுவித்து மன்னிப்பு வழங்கினார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப்போகும் டிரம்ப் இதுவரை 29 பேரை வழக்குகளில் இருந்து தனக்கு வேண்டியவர்களை விடுவித்து மன்னிப்பு வழங்கினார் எனக் கூறப்படுகிறது. அதில் 26 பேருக்கு முழு மன்னிப்பாகவும் 3 பேருக்கு தண்டனைக் குறைப்பாகவும் இருக்கிறது எனத் தகவல்கள் கூறப்படுகின்றன. இந்த மன்னிப்பு பெரும்பாலும் தண்டனை காலத்தை குறைப்பதுதானே தவிர அவர்கள் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றுவதோ அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஆக்குவதோ அல்ல என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல டிரம்பின் வெற்றியில் ரஷ்ய தலையீடு இருந்தது எனும் வழக்கின் இன்னொரு குற்றவாளியான சிறப்பு வழக்கறிஞர் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின்னுக்கும் டிரம்ப் கடந்த நவம்பர் மாதம் மன்னிப்பு வழங்கினார். அதேபோல கடந்த 2007 ஆம் ஆண்டு இராக் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்கள் குழுமி இருந்தபோது கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிளாக் வாட்டர் மற்றும் அவருடன் இருந்த 4 இராணுவ வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.