ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்ட் டிரம்ப் சரண் அடைகிறாரா?
- IndiaGlitz, [Tuesday,April 04 2023]
முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்தார் என்பதுபோன்ற வழக்கு நியூயார்க் நகரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக நியூயார்க் வந்துள்ள டிரம்ப் நீதிமன்றத்தில் சரண அடைவார் எனக் கூறப்படுகிறது.
டிரம்ப் கடந்த 2016 இல் நடைபெற்ற தேர்தலின் போது குடியரசு கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவர் டிரம்பிற்கும் தனக்கு நெருக்கமான உறவு இருப்பதாகப் பொதுவெளியில் தகவல் வெளியிட்டார். இந்தக் குற்றச்சாட்டை முதலில் மறுத்துவந்த டிரம்ப் தேர்தல் நேரத்தில் தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பதைத் தடுப்பதற்காக ஸ்டோர்மிக்கு பணம் கொடுத்தார் என்றும் அந்தப் பணம் தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் அப்போதே குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்த நிலையில் இதுகுறித்த விசாரணை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் டிரம்பின் வழக்கறிஞராகச் செயல்பட்டுவந்த மைக்கேல் கோஹன் டிரம்ப்பிற்கு எதிராக சாட்சி அளித்த நிலையில் பணம் கொடுத்தற்கான ஆவணமும் கைப்பற்றப்பட்டது. இதனால் மன்ஹாட்டன் நகரில் டிரம்ப்பிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் இருந்து சொந்த விமானத்தின் மூலம் நியூயார்க் நகருக்கு வந்திருக்கிறார்.
மேலும் தனது ஆதரவாளர்கள் சூழ்ந்துள்ள பகுதிக்குள் கார் மூலம் பயணித்த அவர் டிரம்ப் டவரிலிருந்து நேராக நீதிமன்றத்திற்குச் செல்வார் என்றும் அங்கிருந்து திரும்பிய பிறகு சரணடைவார் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 45 ஆவது அதிபரான டொனால்ட் டிரம்ப் வரப்போகும் 2024 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அதிபர் பதவியைப் பிடிப்பதற்கு விரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் அதிபரான அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது அவரே சரணடையும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர் சரணமையும்போது கைது செய்யப்பட்டு அவரின் கைரேகை எடுக்கப்படும், அதேபோல புகைப்படம் எடுக்கப்பட்டு அது தொலைக்காட்சிகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் மீதான இந்த வழக்கு தற்போது உலக அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.