டான் - இளைஞர்களையும் குடும்பங்களையும் குஷிப்படுத்தி நெஞ்சை தொடுகிறார்
பள்ளி, கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் அனைத்து வகையான திரைப்பட ரசிகர்களும் மிகவும் விரும்பும் ஒன்றாகும். தமிழ் திரையுலகின் தற்போதைய டாப் ஜனரஞ்சக ஹீரோவான சிவகார்த்திகேயன், அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் கைகோர்த்திருக்கும் 'டான்' என்ற கேம்பஸ் டிராமா படம் அனைவரையும் கவருமா என்ற கேள்விக்கு ஆம் என்பதே நேரடியான பதில்.
சக்ரவர்த்தி (சிவகார்த்திகேயன்), தன் குழந்தை பருவத்திலிருந்தே படிப்பை வெறுக்கிறார். அடிக்கு பயந்து தன் தந்தையை சமாளிப்பதற்காக தன் பள்ளி காலத்தில் மார்க் ஷீட்டுகளை மாற்றி ஏமாத்த பழகி அது கல்லூரி வரை தொடர்கிறது. தந்தைக்காக எஞ்சினீரிங் கல்லூரியில் சேரும் ஹீரோ உதவித் தலைமை ஆசிரியர் பூமிநாதனுக்கு (எஸ்.ஜே. சூர்யா) எதிராக மாணவர்கள் பக்கம் நின்று அவர்களின் டானாக மாறுகிறார். சக்கரவர்த்தி மீதமுள்ள கல்லூரி ஆண்டுகளில் தான் யாரென்று கண்டுபிடித்து வாழ்க்கையில் முன்னேறுவேன் என்று நம்புகிறார். இதற்கிடையில், அவர் பள்ளி காலத்தில் காதலித்த அங்கையற்கரசி (பிரியங்கா அருள் மோகன்) கல்லூரியில் சேர மீண்டும் அவரை கவரும் முயற்சியிலும் இறங்குகிறார். வீட்டிலும் கல்லூரியிலும் வில்லன்களை எதிர்கொள்ளும் ஹீரோ தான் யாரென்று கண்டறிந்து வாழ்க்கையில் ஜெயித்தாரா இல்லையா என்பதே டானின் மீதி திரைக்கதை.
சிவகார்த்திகேயன் பல பரிமாணங்கள் அடங்கிய ஒரு கதாப்பாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். உயர்நிலைப் பள்ளி மாணவனாக பிரியங்காவைக் காதலிக்கும் இடங்களில் குறும்புத்தனம், எஸ் ஜெ சூர்யாவை எதிர்க்கும் இடங்களில் மாஸ் என்று அதகளம் செய்கிறார். பின் பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளில் இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கண்களை நனைத்து விடுகிறார். மொத்தத்தில் சிவாவின் திரைவாழ்க்கையில் டான் ஒரு மைல்கல். 'மாநாடு' படத்தில் மிகையான நடிப்பில் சிக்ஸர் அடித்த எஸ் ஜெ சூர்யா இதில் மீட்ட்ரை குறைத்து கொஞ்சம் பெண்மை கலந்து அதே அளவுக்கு பின்னி பெடல் எடுக்கிறார். வழக்கம் போல் சமுத்திரக்கனி, குணச்சித்திரத்தில் மிரட்டலான நடிப்பை தந்து அந்த வெளித்தோற்றத்தில் இரக்கமற்றவராகவும் உள்ளுக்குள் பாசமிகுந்த அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். . பிரியங்கா அருள் மோகன் வழக்கமான காதலியி கதாபாத்திரத்திற்கு தன அழகாலும் வசீகரிக்கும் நடிப்பாலும் மெருகு சேர்த்திருக்கிறார். இரண்டு டூயட்களிலும் தனது நடன அசைவுகளாலும் க்யூட் முகபாவனைகளாம் வசீகரிக்கிறார். சூரி, சிங்கம் புலி, ஜார்ஜ் மரியான், பால சரவணன், முனிஸ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி என திறமையான நகைச்சுவைப் பாதாளத்திற்கு முழு தீனி போடவில்லை என்றாலும் அவருக்கென்று முத்திரை பாதிக்க ஒரு சில காட்சிகள் படத்தில் உண்டு என்பது ஆறுதல். சிவங்கியை அதிகம் எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
முதல் பாதியில் இளைஞர்களையும், இரண்டாம் பாதியில் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் சமமான காட்சிகள் மூலம் திருப்திப்படுத்திய வகையில் இயக்குனர் பெரிதும் ஸ்கோர் செய்கிறார். நகைச்சுவையில் கவனிக்கத்தக்க தருணங்கள் சிவா, சூரி மற்றும் சிங்கம்புலி இருவரையும் ஒரே நேரத்தில் தன் அப்பாவாக நடிக்க வைத்து சூர்யாவை ஏமாற்றும் போதும் மற்றும் , கல்லூரி பேராசிரியர்களயே தேர்வு எழுத வைத்து அவர்களை திக்கு முக்காட வைத்திருக்கும் இடங்களை சொல்லலாம். . சிவாவிற்கும் பிரியங்காவிற்கும் இடையிலான காதல் ஒரு சில இடங்களில் இயல்பாகவும் சில இடங்களில் பழசாகவும் இருந்தபோதிலும் மனதை கவர தவறவில்லை. எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரது கதாபாத்திரங்களின் தன்மையையும் திடீரென அந்தர் பல்டியடிக்க வைத்தததை ஜீரணிக்க முடிந்தால் கடைசி அரை மணி நேர சென்டிமென்ட் காட்சிகள் மனதை உலுக்கும். கல்லூரிகள் நடைபெறும் விதத்தை நய்யாண்டி செய்யும் பல இடங்கள் மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோரும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
மைனஸ் என்று பார்த்தல் திரைக்கதை எந்த வித புதுமையும் இல்லாமல் நாம் பார்த்து பழகிய பார் முலாவுக்குள்ளேயே பயணிக்கிறது. '3 இடியட்ஸ்/நண்பன்' படங்களை நினைவூட்டுது மட்டுமல்லாமல் . எஸ்.கே.வுக்கும் சூர்யாவுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் விஜய் மற்றும் சத்யராஜின் ஜெராக்ஸ் காப்பியாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன முன்பு குறிப்பிட்டது போல இரு எதிர் மறை கதாபாத்திரங்களும் திடீர் மாற்றம் கொள்வது ஜீரணிக்க சற்று கடினமாக உள்ளது. படம் மூன்று மணிநேரம் ஓடுவதை நியாயப்படுத்தும் அளவுக்கு காட்சிகள் இல்லை.
இது அனிருத் சீசன் என்பதால் பாடல்களையும் பின்னணி இசையையும் அவர் உண்மையான டான் போலவே காதுகளுக்கு செம விருந்து படைத்திருக்கிறார். . லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து பிரமாண்டமாக படைத்திருக்கிறார்கள். படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் நிறைவு . எல்லா தரப்பு பார்வையாளர்களையும் திருப்தி படுத்தும் கமர்ஷியல் படம் எடுப்பது அவ்வளவு லேசான காரியம் இல்லை . அதை அறிமுக படத்திலேயே குறிப்பிடத்தக்க அளவுக்கு நிகழ்த்தி காட்டியிருக்கும் சிபி சக்ரவர்த்தி தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. வாழ்த்துக்கள் .
பெரும்பகுதி பொழுதுபோக்காகவும் அதே சமயம் செண்டிமெண்ட் மற்றும் ஒரு சில நல்ல கருத்துக்களையும் சொல்லும் இந்த டான் உங்களை கவர்வார்
Comments