மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…பொதுத் தேர்வு!
- IndiaGlitz, [Tuesday,April 20 2021]
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனின் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரம் பெற்று இருப்பதால் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளன.
இதனால் கடந்த மாதம் நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதல்வர் தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு என எந்த பொதுத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் எந்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை ஒதுக்குவது என்பதுபோன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடிவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை பள்ளி அளவில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் எனவும் மேலும் இந்த தேர்வினை அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டு இருக்கிறது.