கொரோனாவில் இறந்தவர்களின் பலி எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறதா??? தொடரும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்!!!
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
சீனாவின் வுஹாண் மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டதாக அமெரிக்கா முதற்கொண்டு பல மேற்கத்திய நாடுகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தன. மேலும், சீனாவுக்கு ஆதரவாக உலகச்சுகாதார அமைப்பு செயல்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து தற்போது இயல்புநிலை திரும்பியிருக்கிறது. இந்நிலையில் வுஹாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் காராணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 50 விழுக்காடு அதிகரித்து புதிய கணக்கை வெளியிட்டு இருக்கிறது வுஹாண் மாகாண நிர்வாகம். இதுகுறித்து இறப்பு விகிதத்தில் தவறுநடந்துவிட்டதாகவும் அதனால் தற்போது அதிகரித்து வெளியிட்டுள்ளதாகவும் சீன அரசுதரப்பு செய்திவெளியிட்டு இருக்கிறது.
கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையில்லை என அமெரிக்கா, சீனா மீது தொடர் குற்றச்சாட்டு எழுப்பி வந்தது. சீனாவின் சோதனைக் கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்றும் சீனாவிற்கு ஆதரவாக உலகச் சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்றும் பலக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் சீனா கொரோனா பலி எண்ணிக்கையை அதிகரித்து வெளியிட்டு இருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
முன்னதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரனும் சீனா கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறது எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து, சின வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜாவ் லிஜியான் “கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பக்கட்டத்தில் அதைக் கட்டுக்குள் வைக்க நாங்கள் சிரமப்பட்டோம் என்பது உண்மைதான். எனவே அப்போது நிகழ்ந்த மரணத்தை சரியாகப் பதிவு செய்ய முடியவில்லை. தற்போது அதைத் திருத்தியுள்ளோம். கொரோனா விவகாரத்தல் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. மூடி மறைக்கப் போவதுமில்லை” என்று விளக்கம் அளித்திருக்கிறார். உலகச்சுகாதார அமைப்புடன் நெருக்கம் காட்டிவருவது குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், “சீனாவின் நற்பெயருக்குக் களங்கள் விளைவிக்கவே இப்படி சொல்லப்படுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
வுஹாண் மாகாணத்தில் மரண எண்ணிக்கை குறித்த தகவலை அம்மாகாண நகர நிர்வாகம் தற்போது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி வுஹாணில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1,290 பேரை சேர்த்து வெளியிட்டு இருக்கிறது. இதனால் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,869 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் அதைக் கையாளமுடியாமல் இருந்தது எனவும் அந்த சமயத்தில் நடந்த குழப்பத்தின் காரணமாக எண்ணிக்கையில் தவறு நடந்துவிட்டதாகவும் சீனா தற்போது விளக்கம் அளித்திருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பலர் வீடுகளிலேயே இறந்துள்ளனர். அத்தகைய நபர்களின் எண்ணிக்கையை சேர்த்து இருப்பதால் தற்போது 50 விழுக்காடு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.