மாரிசெல்வராஜ்ஜின் கர்ணன் திரைப்படம் வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்கிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்ணன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே அது "கொடியன்குளம்" வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு திரைப்படம் என்பதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதனால் கர்ணன் திரைப்படத்தில் வரும் பொடியன்குளம் எனும் கிராமம் எது என்பது குறித்து ரசிகர்கள் மிக எளிதாக உணர்ந்தும் இருந்தனர்.
இந்நிலையில் "கர்ணன்" திரைப்படத்தில் இடம்பிடித்த கொடியன்குளம் நிகழ்வு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் "கர்ணன்" திரைப்படத்தில் காட்டப்பட்டு இருக்கும் பொடியன்குளம் சம்பவம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்றதாக காட்டியிருக்கிறார். இதனால் இயக்குநர் மாரிசெல்வராஜ் செய்தது வரலாற்றுப் பிழை என்பதுபோல யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமர்சனத்தை ஒட்டி இயக்குநர் மாரிசெல்வராஜ் வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்க முயற்சிக்கிறாரா? அல்லது ஒருவர் மீது மட்டும் தவறான கற்பிதம் செய்ய முயற்சிக்கிறாரா? என்பதுபோன்ற பல்வேறு தரப்பு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் "கர்ணன்" திரைப்படத்தில் இடம்பிடித்த வரலாற்று நிகழ்வுகள் குறித்து சில அமைப்புகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் சிலர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் 1995-1996 வாக்கில் தூத்துக்குடி, நெல்லை போன்ற பகுதிகளில் கடுமையான சாதிய பிரச்சனைகள் நடைபெற்று வந்தன. இந்தப் பிரச்சனைகளால் கிட்டத்தட்ட 40 கிராமங்களின் இயல்பு வாழ்க்கையே சீரழிந்து விட்டது. இப்படியான ஒரு சூழலில் "கொடியன்குளம்" பிரச்சனை நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தை இருபெரும் கட்சி சார்பான பிரச்சனையாக குறுக்குவதைவிட, சமூகத்தில் நடக்கும் அழுத்தங்களாகப் பார்க்க வேண்டும்.
மேலும் உண்மையில் கொடியன்குளம் சம்பவம் 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றது. ஆனால் இதன் தொடர்ச்சியாக கடந்த 1997 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்துப் போக்குவரத்துக் கழகத்திற்கும் மறைந்த நாயகர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரை வைத்தார். அப்படித்தான் கட்டபொம்மனின் படைத்தளபதியான ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கனார் பெயரும் வைக்கப்பட்டது. இந்த பெயரை நீக்குமாறு தூத்துக்குடி பகுதியில் ஆதிக்கச் சாதியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையொட்டி ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் மேலவளவு ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை ஒரு பேருந்து குறியீடு என்பதாக எடுத்துக் கொண்டுதான் மாரிசெல்வராஜ் "கர்ணன்" திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். மேலும் இந்தப் படம் ஆதிக்கச் சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தை சித்தரிப்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டு இருக்கிறதே தவிர, இந்த ஆட்சிக் காலத்தில்தான் ஒடுக்குமுறை இருந்தது என்று சித்தரிக்கும் நோக்கம் மாரிசெல்வராஜ்க்கு இருப்பதாகத் தெரியவில்லை என விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
ஆனால் "கர்ணன்" திரைப்படம் குறித்து எழும் இதுபோன்ற விமர்சனங்களுக்கு படக்குழு சார்பாகவோ அல்லது இயக்குநர் சார்பாகவோ எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com