கட்சியில் இருந்து விலகிய குமரவேலுக்கு சரமாரியாக கேள்வி கேட்ட சரளா!
- IndiaGlitz, [Tuesday,March 19 2019]
கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் கட்டுக்கோப்பாக சென்று கொண்டிருந்தார். ஆனால் சமீபத்தில் நடிகை கோவை சரளா அக்கட்சியில் சேர்ந்தவுடன் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த உடனே அவரை வேட்பாளரை நேர்காணல் காணும் ஒருவராக கமல் பணியமர்த்தியதை பொறுக்க முடியாமல் அக்கட்சியில் இருந்து மூன்று நிர்வாகிகள் விலகினர். ஆனால் அதில் குமரவேல் மட்டுமே ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கோவை சரளா கேட்கும் பதில் சொல்லவா ஒரு வருடம் அந்த கட்சியில் உழைத்தாய்? என தனது மனைவி கேட்பதாக குமரவேல் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த கோவை சரளா, 'நான் கட்சியில் சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால் எனக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில் என்னை நேர்காணல் செய்ய கமல்ஹாசன் அழைத்தார்.
கட்சியில் சேர்ந்து இரண்டு நாள் ஆனால் நான் முட்டாள் என்று குமரவேல் நினைக்கிறாரா? எனக்கு அரசியல் தெரியாது, எனக்கு கேள்வி கேட்க தகுதியில்லை, நேர்காணல் செய்ய தகுதி இல்லை என்று குமரவேல் நினைக்கிறாரா? என்று கேள்வி எழுப்பிய கோவை சரளா, அந்த நேர்காணலில் நான் உள்பட பலர் கேள்வி கேட்டனர். ஆனால் குமரவேல் என்னை மட்டும் குறிப்பிட்டு சொன்னது உள்நோக்கம் கொண்டது என்று கூறினார்.
கமல் கட்சி கட்டுக்கோப்பானது, ஜனநாயக வழியில் சென்று கொண்டிருக்கின்றது என்று நினைத்த மக்களின் மனதில் குமரவேல் விலகல் ஒரு கரும்புள்ளியை உண்டாக்கியுள்ளது. இந்த புள்ளியை நீக்க கமல் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்