கொரோனா தொற்று இதயத்தையும் பதம் பார்க்குமா??? ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

பொதுவாக கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அது இதயத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என கொல்கத்தாவில் உள்ள பி.எம் பிர்லா ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. கொரோனா நோய் சிகிச்சை குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் பிர்லா ஆய்வு மைய மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 5 இல் ஒருவருக்கு சுவாசக் கோளாறு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து உள்ளனர்.

இதுகுறித்து ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் திம்மன் கஹாலி, கொரோனா பாதித்த நோயாளிகள் நெஞ்சு வலிப்பதாகக் கூறுகின்றனர். கொரோனா நோய்த்தொற்று நேரடியாக இதய அமைப்புகளை பாதிக்கிறது. இதனால் ஏற்படுகிற மார்புவலி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் படிப்படியாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது மேலும் சிக்கலாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 20 சதவீதம் கொரோனா நோயாளிகளுக்கு நெஞ்சு வலி போன்ற சிக்கல் இருப்பதகாவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நெஞ்சுவலி, சுவாசக் கோளாறு போன்ற சிக்கல்கள் கொரோனாவின் உச்சத்தால் மாரடைப்பாகவும் மாறி பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.