வாழ்த்து அட்டையுடன் 5 கோடி கடனை தள்ளுபடி செய்த மாமனிதர்… நெகிழ்ச்சி சம்பவம்!!!
- IndiaGlitz, [Monday,January 11 2021]
அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சை மையம் நடத்தி வரும் பிரபல டாக்டர் ஒருவர் தன்னுடைய நோயாளிகளின் ரூ.5 கோடி கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார். இச்செய்தியை தனது வாடிக்கையாளர்களுக்கு சொன்ன விதம்தான் மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு நோயாளிகளுக்கும் மருத்துவர் ஓமர் டி அதிக் தனிப்பட்ட முறையில் வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தார்.
அந்த வாழ்த்து அட்டையில் நீங்கள் எனக்கு தர வேண்டிய கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது எனக் கூறப்பட்டு இருந்தது. இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் ஓமர் தள்ளுபடி செய்த கடன் தொகை அமெரிக்க டாலரில் 650,000. அது இந்திய மதிப்பில் ரூ. 5 கோடிக்கும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் ஓமர் டி அதிக், ஆர்கன்சாஸ் நகரில் Pine Bluff community எனும் புற்றுநோய் சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறார். இவரிடம் வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையிலும் வைத்தியம் செய்யப்படுகிறது. இதனால் தனக்கு வரவேண்டிய கடன் தொகையை வசூலிக்க டாக்டர் ஓமர் தனி அதிகாரி ஒருவரையும் நியமித்து உள்ளார். ஆனால் கொரோனா நேரத்தில் செய்த மருத்துவத்திற்கு உரிய தொகையை கேட்கலாமா? அப்படிக் கேட்டால் அவர்களால் கொடுக்க முடியுமா? எனப் பல கேள்விகளை ஓமர் எழுப்பி உள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய் ஏற்படுத்திய தாக்கம் இந்தியாவை விட பல மடங்கு அதிகமாகி இருக்கிறது. இதனால் டாக்டர் ஒமர் மனம் வருந்தி தனது வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை வசூலிக்கக் கூடாது என முடிவெடுத்து உள்ளார். இதனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து அட்டைகளை அனுப்பி அதில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்ததோடு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது மருத்துவக் கடனில் இருந்து விடுபட்டு உள்ளனர்.