ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர்....! அதிரடி கைது...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வேகமாக உருவெடுத்து வரும் இக்கடுமையான சூழலில், கொரோனா மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் இல்லாததால் ஏராளமான மக்கள் தினமும் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொற்றின் தாக்கம் தீவிரமாகவே உள்ளது. அதைப்போல தமிழகத்திலும் கொரோனா-2-ஆம் அலை தீவிரமாக பரவுவதால், குறிப்பிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறலை குறைக்க, மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது தான் ரெம்டெசிவர் மருந்து.ஆனால் இம்மருந்திற்கு தமிழகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
இதைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் இதுகுறித்து தீவிரமாக கண்காணித்தனர். தாம்பரத்தில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனைக்கு அருகில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டபோது, அங்கு வந்த காரில் 17 ரெம்டெசிவர் பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது இம்ரான்கான். காவல்துறையினர் அவரிடம் விசாரித்தபோது, திருவண்ணாமலையைச் சார்ந்த விக்னேஷ்-இடமிருந்து, ரூ.8500 தந்து மருந்தை வாங்கி வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.20000-த்திற்கு விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மருத்துவரையும், திருவண்ணமலை சென்று விக்னேஷ்-யும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விக்னேஷ் ரூ.4700 மதிப்புள்ள ரெம்டெசிவர் மருந்தை, மருத்துவருக்கு ரூ.8500-க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்மருந்தை மருத்துவர் முகமது இம்ரான்கான் நோயாளிகளுக்கு சுமார் 20000-திற்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து மேலும் ஒருவரை கைது செய்த காவல்துறையினர், கள்ளச்சந்தையில் இதுபோன்று மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments