மரணத்திற்கு முன் கொரோனா விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய டாக்டர் சேதுராமன்: வைரலாகும் வீடியோ
- IndiaGlitz, [Friday,March 27 2020]
’கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்தில் நடித்த நடிகரும் டாக்டருமான சேதுராமன் நேற்று இரவு மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார் என்ற செய்தி அனைத்து திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மரணத்திற்கு முன்னர் அவர் கொரோனா விழிப்புணர்ச்சி குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள கொரோனா நிலைமை அனைவருக்கும் தெரியும். கொரோனா வைரசை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதும் அனைவருக்கும் தெரியும். முதலாவது தனிமைப்படுத்துதல். தனிமைப்படுத்துதலை யாரும் கவனக்குறைவாக நினைக்க வேண்டாம்.
அதைவிட முக்கியம் வயதானவர்கள் வீட்டில் இருந்தால் தயவு செய்து அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு சில நோய்கள் இருக்கும் என்பதால் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே கொரோனா அவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். எனவே தான் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இன்கியூபேஷன் பீரியட். கொரோனா வைரஸ் ஒருவரைப் தொற்றினால் 5 முதல் 14 நாட்கள் வரை எந்தவித அறிகுறியும் தெரியாமல் கூட இருக்கலாம். எனவேதான் இந்த காலகட்டத்தில் தயவுசெய்து தனிமைப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் வைரஸை அடுத்தவருக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை கவனித்துக் கொள்வோம்.
மேலும் நமக்காக தங்கள் குடும்பங்களை கூட பிரிந்து மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் உயிரை கொடுத்து வேலை செய்து வருகின்றார். நமக்காக பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே உதவி கொரோனா மேலும் பரவாமல் இருக்க நாம் அனைவரும் வீட்டில் இருந்து செய்யும் உதவிதான்.
நாம் அனைவரும் ஒன்று கூடி சேராமல் இருப்போம். கொரோனாவை விரட்டுவோம்’ என்று டாக்டர் சேதுராமன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.