அலட்சியத்தால், கொரோனா நோயாளியை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த மருத்துவர்!!!

  • IndiaGlitz, [Tuesday,April 21 2020]

 

 

அலிகார் முஸ்லீம் பல்கழைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட AMU ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட ஒரு நோயாளியை மருத்துவர் ஒருவர் தனது அலட்சியத்தால் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார். மருத்துவரின் அலட்சியப்போக்கை கண்டித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய அக்கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 47 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருதய கோளாறு காரணமாக எக்ஸ்ரே எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரும் நோயாளி அவசர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். இந்த அலட்சியப் போக்கை கண்டித்து, மாவட்ட நிர்வாகம் மருத்துவமனை கல்லூரிக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது.

தொடர்ந்து 3 தினங்களாக கொரோனா பாதிப்பு உள்ள நோயாளியுடன் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களது குடும்பங்களோடும் தொடர்பில் இருந்திருக்கின்றனர். ஒரு மருத்துவரின் அலட்சியப் போக்கால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிவரும் எனத் தற்போது அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.