கொரோனா சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து… நோயாளிகளை பத்திரமாகக் காப்பாற்றிய மருத்துவர்!!!
- IndiaGlitz, [Monday,November 16 2020]
ருமேனியா நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பலரை, தீ விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் ஒரு அரசு மருத்துவர். அவருக்கு அந்நாட்டின் பிரதமர் முதற்கொண்டு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டின் பியட்ரா நீம்ட் எனும் நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பல கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஐசியூ பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சனிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்த விபத்தினால் 7 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 7 நோயாளிகள் ஒரு மருத்துவர் என மொத்தம் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்து ஏற்பட்ட உடனேயே தீ மளமளவென அந்த மருத்துவமனை தளம் முழுக்க ஏற்பட்டதாக அங்கு வேலைப் பார்த்தவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
ஆனால் ஐசியூ பிரிவில் இருந்த மருத்துவர் கேட்டலின் டென்சியூ மிகத் துரிதமாகச் செயல்பட்டு தீ விபத்தில் இருந்து பல நோயாளிகளைக் காப்பாற்றி இருக்கிறார். மேலும் அவருடைய துரிதமான செயலினால் சிறிய காயங்களுடன் பலர் இன்று உயிருடன் இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவர் கேட்டலின் டென்சியூவை குறித்து அந்நாட்டின் பிரதமர் லுடோவிக், “நோயாளிகளை காக்க துணிச்சலுடனும் தியாக உணர்வுடனும் ஹீரோவாக செயல்பட்ட டாக்டருக்கு நான் மரியாதை தெரிவித்து கொள்கிறேன்” எனக் கூறி இருக்கிறார்.