மருத்துவர் மாட்டுச் சாணம் சாப்பிடும் வீடியோ… அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,November 18 2021]

ஹரியாணாவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் வீடியோவில் மாட்டுச்சாணத்தை சாப்பிட்டுக் காட்டி இது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என விளக்கம் அளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இந்தியாவில் மாட்டுச் சாணம், கோமியம் போன்றவை மருத்துவக் குணம் வாய்ந்தது என்ற நம்பிக்கை பொதுவாகவே இருந்துவருகிறது. இந்த நம்பிக்கைக்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற நம்பிக்கை எல்லா ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறது. மேலும் இதை பொதுமக்களும் நம்பி தங்களது அன்றாடப் பழக்க வழக்கங்களில் இதைப் பயன்படுத்தவும் செய்கின்றனர்.

இந்நிலையில் ஹரியாணா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்பவர் பசுமாட்டின் சாணம், கோமியம் போன்றவை உடல்நலத்திற்கு எவ்வளவு நல்லது எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் நேரடியாக மாட்டுச்சாணத்தை சாப்பிடவும் செய்கிறார்.

அதோடு கர்ப்பமான பெண்கள் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் நார்மல் டெலிவரியே நடக்கும் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் பஞ்சகவ்வியத்தின் ஒவ்வொரு பொருளும் மிக உயர்வானது, மாட்டுச் சாணத்தைச் சாப்பிட்டால் நம் உடல், மனம், ஆன்மா எல்லாம் சுத்தமாகும் எனக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படித்த மருத்துவர் மனோஜ் மிட்டல் மாட்டு சாணத்தைச் சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அறிவியலில் இல்லாத ஒரு விஷயத்தை அவர் எப்படி சொல்லலாம்? உண்மையிலேயே அவர் மருத்துவம் படித்தவர் தானா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.