மன்னிப்பை ஏற்க முடியாது, புகார் அளிக்க போவது உறுதி: பாடகி சின்மயி திட்டவட்டம்

  • IndiaGlitz, [Sunday,June 13 2021]

தற்போது மிக வேகமாக பரவி வரும் கிளப் ஹவுஸ் என்ற குரல் வழி பேசும் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மருத்துவர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக பாடகி சின்மயி அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கவியரசு வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியது உள்பட பாடகி சின்மயி குறித்து பல விஷயங்கள் கிளப்ஹவுஸ் என்னும் குரல்வழி சமூகவலைதளத்தில் உள்ள ஒரு குழுவில் சமீபத்தில் பேசப்பட்டது. இந்த குழுவில் மருத்துவர் அரவிந்த் ராஜ் என்பவர் பாடகி சின்மயி காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்றதாகவும், அவரது மனநலம் எப்படி என்பது என்பது குறித்து தனக்குத் தெரியும் என்றும் கூறினார்

இதனை அடுத்து இந்த குழுவில் இணைந்த சின்மயி தன்னுடைய தனிப்பட்ட விவரங்களை எவ்வாறு சமூக வலைதளங்களில் பேசலாம் என காரசாரமாக கேள்வி எழுப்பினார். இருவருக்கும் இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் நடந்ததை அடுத்து அந்த குழுவில் இருந்து மருத்துவர் அரவிந்தராஜ் வெளியேறியுள்ளார்

இந்த நிலையில் மருத்துவர் அரவிந்த்ராஜ் மீது சட்ட ரீதியிலான புகார் அளிக்க உள்ளதாக பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மருத்துவர் அரவிந்தராஜ், சின்மயி தொலைபேசிக்கு தொடர்பு கொண்டதாகவும் அவர் அதனை எடுக்காததால் அவரது தாயிடம் பேசி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது. ஆனால் மருத்துவரின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாத சின்மயி காவல்துறையிடம் புகார் அளிக்கப் போவது உறுதி என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.