மனைவியிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்த டாக்டர்!

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

மனைவியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லியில் குருக்ராம் என்ற பகுதியைச் சேர்ந்த சுர்ஜித்குமார் என்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார் இருவரும் இணைந்தே இந்த விவகாரத்து முடிவை எடுத்துள்ளனர் என்பதும், சமீபத்தில் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் முதல் விசாரணை நடந்த போது இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மனைவி மற்றும் மகள் இல்லாமல் தனிமையில் இருந்த டாக்டர் சுர்ஜித்குமார் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்தார். தற்கொலைக்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் தனது மனைவிக்கு போன் செய்து 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

காவல்துறையினர் விரைந்து வந்து டாக்டர் சுர்ஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி மற்றும் மகள் பிரிவை தாங்காமல் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.