கொரோனா நோய்த்தொற்று எந்தெந்த உடல் உறுப்புகளை, எப்படி பாதிக்கிறது தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவும் போது நிமோனியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. அடுத்து ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை உடையது எனவும் கூறப்பட்டது. சளி, காய்ச்சல், மூச்சுக்குழாய் வீக்கம், சுவாசப் பாதை வீக்கம், உறுப்பு செயலிழப்பு, மரணம் எனப் படிப்படியான தாக்கத்தை இந்த நோய்த்தொற்று ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது.
தற்போது, கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைப் போன்று அதன் தன்மைகளும் மாறுபட்டு கொண்டே வருகின்றன. மரபணு வரிசையில் மாற்றம், பிரதேசங்களுக்கு ஏற்ப நோய்பரவும் தன்மைகளில் வேறுபாடு, புதுப்புது நோய் அறிகுறிகள் என்று இந்த வைரஸ் தன்னைப் புதுப்பித்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் மனித உடலில் சுவாசப் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தி சுவாசத்தை தடைசெய்யும் என அறியப்பட்ட இந்த நோய்த்தொற்று வேறுபல தீவிர அழிவுகளையும் தற்போது உண்டு பண்ணுகிறது.
இரத்தம் – கொரோனாவின் அடிப்படை நோயான காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதைகளின் வீக்கத்தால் முதலில் இரத்தச் செல்கள் பாதிக்கப் படுகின்றன. செல்கள் பாதிக்கப் படுவதால் இரத்தம் ஓர் இடத்தில் இருந்து மற்ற உடல் பாகங்களுக்குச் செல்வதில் தடை ஏற்படும். மேலும், நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் நோய் எதிர்ப்பு புரதங்களை சுரப்பதால் நுரையீரலில் கட்டிகள் போன்ற வீக்கமும் தோன்றுகிறது. இந்த வீக்கம் ஒருவருக்கு கொரோனா நோய் குணமான பின்பும் கூட தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூளை – மூளையிலுள்ள இரத்தச் செல்களில் இரத்தம் உறைவதால் சில சமயங்களில் Stoke ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பக்கவாதம், இரத்தம் உறைதல், தலைவலி, தலைச்சுற்றல், குழப்பம், பலவீனமான உணர்வு போன்றவையும் இந்த கொரோனா பாதிப்பினால் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.
கண்கள் – கொரோனா பாதித்த சில நோயாளிகளுக்கு கண்கள் இளஞ்சிவப்பாக மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று கண்களின் உள்ளே இருக்கும் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி கண்களில் வெள்ளை பகுதியையும் சிதைக்கிறது.
இரைப்பை குடல் (Gastrointestinal tract) – செரிமான மண்டலத்தில் உள்ள செல்களில் நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலியை உண்டுபண்ணும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்தம் தடைபட்டு உறைவதால் அடைப்புகள் தோன்றி குடலையும் சேதப்படுத்தி விடுகிறது. இதற்காக சில நேரங்களில் தீவிரச் சிக்சை மற்றும் அறுவைச் சிகிச்சையும் தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கைகள் – கொரோனா நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் அரிப்பு, தோல் நிற மாறுபாடு தோன்றுவதாக ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர். இது நரம்ப மண்டல கோளாறு காரணமாக நிகழ்கிறது எனவும் மருத்துவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர். சில சமயங்களில் தசை பலவீனம், தற்காலிக கை, கால்கள் முடக்கத்தையும் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தி விடுகிறது.
இதயம் – ரத்த ஓட்டம் தடைப்படுவதால் சில நேரங்களில் Carduac arrest ஏற்படவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளும் கொரோனா நோயாளிகளுக்கு தோன்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கால்கள் – கால்களுக்கு போகும் இரத்தம் தடைப்படுவதால் இஸ்கெமியாவை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறைந்த பக்கவாதம் போன்ற பாதிப்புகளும் கொரோனா நோயாளிகளைத் தாக்குகிறது.
கல்லீரல் – வைரஸ் நோய்த்தொற்றின் நேரடி பாதிப்பினால் கல்லீரல் செயலிழப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சுரப்பிகளால் தோன்றும் வீக்கமும் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
நுரையீரல் – கொரோனா நோய்த்தொற்றால் சுவாசப்பாதைகளில் உள்ள எபிதீலியம் செல்கள் பாதிக்கப்பட்டு நுரையீரலின் அல்வியோலி சுவர்களை தாக்குகிறது. இதனால் நுரையீரல் சுவர்கள் சிதைவதோடு கடுமையான வீக்கத்தையும் உண்டு பண்ணுகிறது. கடுமையான நிமோனியா போன்ற கோளாறுகளும் தோன்றுகின்றன. மேலும், மார்பு வலி, மூச்சுத் திணறல் போன்றவையும் ஏற்படுகிறது. நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் இதோடு இணைந்த பல உறுப்புகளும் சேதமடைகின்றன.
சிறுநீரகம் –பலவீனமான இரத்த ஒட்டம் காரணமாக சிலருக்கு கடுமையான சிறுநீரகக் கோளாறுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
மூக்கு மற்றும் வாய் – கொரோனா நோய்த்தொற்று நிமோனியா போன்ற சளி ஒழுகலை ஏற்படுத்துவதோடு ஆல்ஃபாக்டரி அமைப்பையும் சேதப்படுத்தி விடுகிறது. இதனால் பல கொரோனா நோயாளிகளுக்கு வாசனை நுகர்வு தெரிவதில்லை. டைகுசியா எனப்படும் அமைப்பிலும் சிதைவு தோன்றுவதால் சுவை உணர்வையும் சிலர் இழந்து விடுகின்றனர்.
தோல் – அதிபடியான தோல் தடிப்புகளையும் சிறிய சிவப்பு புள்ளிகளையும் கொரோனா ஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் கூறியிருக்கின்றனர். இது நோய் எதிர்ப்பு மண்டலப் பாதிப்பினால் தோன்றுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கால் விரல்கள் – கொரோனா நோய்த்தொற்று பாதித்த பலருக்கு கால் விரல்களில் அரிப்பு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது சிக்கன் பாக்ஸ், தட்டம்மை அல்லது சில்ப்ளேன்களை ஒத்த ஊதா தடிப்புகளை போல இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments