இந்தியாவில் சூப்பர் புயல்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா???

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

 

கடந்த சில ஆண்டுகளாகவே வங்ககடலை ஒட்டி புயல்கள் தோன்றி, கரையை கடப்பது வாடிக்கையாகி விட்டது. இதற்கான காரணத்தை தற்போது வானிலை ஆய்வு மற்றும் வளிமண்டல விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனா தடுப்புக்காக இந்தியாவே கடந்த சில தினங்களாக முடங்கியிருந்தது. இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு கிடந்தன. தற்போதுதான் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இப்படியான சூழலில் காற்று மாசுபாடு குறைவாக இருந்தாலும் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. அதாவது 1-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பான நிலையை விட கொரோனா காலத்தில் அதிக வெப்பநிலை வீசுவதாகக் கூறப்படுகிறது.

இப்படி அதிக வெப்பநிலை வீசுவதால் வங்கக்கடல் பகுதிகளில் சதாரண புயல்கள்கூட சூப்பர் புயல்களாக மாற்றப் படுகிறது. அதாவது குறைந்த காற்று அழுத்த மேகங்கள் அதிக வெப்ப நிலை போன்ற தாக்கங்களினால் கடலில் இயற்கையாக நிகழும் புயல்கள் கூட அதிக வலுப்பெற்றவையாக மாறிவிடுகிறது. வங்கக்கடலின் மேற்புரத்தில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மனிதர்களின் எரிபொருள் பயன்பாட்டினால் புவி வெப்பமடைந்து கடல்களின் மேற்பரப்பிலும் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இப்படி கடல் மேற்பரப்புகளில் வெப்பநிலை அதிகரிக்கும் போது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினால் சாதாரண புயல்கள் வலுப்பெற்று சூப்பர் புயலாக மாற்றப் படுகிறது. மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் வங்கக்கடலில் 32-34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இத்தகைய பருவநிலை மாற்றங்களினால் சூப்பர் புயல்கள் உருவாவதாக வெப்பநிலை வானிலை ஆய்வு விஞ்ஞானி மேத்யூ கோல் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், வங்கக்கடலில் மட்டுமல்லாது அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் மேற்புரங்களிலும் இதுபோன்றே வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடல் மேற்புரங்களில் வெப்பநிலை அதிகரிப்பால் இயல்பான பருவ மழையிலும் அதிக மாற்றங்கள் தோன்றுகிறது. ஆம்பன் புயல் விஷயத்திலும் முதலில் 1 ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கையைத்தான் விடுத்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். அடுத்த 18 மணி நேரத்திற்குள் இந்த புயல் கூண்டு எச்சரிக்கை 5 ஆம் எண்ணிற்கு மாற்றப்பட்டது. எப்படி இந்த புயல் அதிவேக சூப்பர் புயலாக மாறியிருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் இதற்கு கடலின் மேற்பரப்பில் நிலவும் அதிக வெப்பநிலையே காரணம் எனத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாரதீப் மற்றும் ஒடிசாவை புரட்டி எடுத்த சூப்பர் புயலுக்குப் பின்னர் தற்போது ஆம்பன் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கங்கை ஆற்றங்கரையை ஒட்டி காணப்படுகின்ற சமவெளிப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப் படுகின்ற காற்று மாசுபாட்டினாலும் வங்கக்கடலில் அதிக வெப்பநிலை ஏற்படுவதாகக் கூறப் படுகிறது. அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதமும் சேர்ந்து இதுபோன்ற சூப்பர் புயலை ஏற்படுத்தி விடுகிறது. இப்படித்தான், இயல்பாக அறியப்பட்ட ஆம்பன் புயல் தற்போது வழக்கத்துக்கு மாறாக சூப்பர் புயலாக மாறியிருக்கிறது. இதற்கு வங்கக்கடலின் மேற்புரத்தில் நிலவும் அதிக வெப்ப நிலையே காரணம் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தப் புயல் மேற்கு வங்கக் கடற்கரையை கடக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.