இந்தியாவில் தங்கக் கடத்தல் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா???

  • IndiaGlitz, [Thursday,July 23 2020]

 

சமீபக் காலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் உலக அளவில் தங்கம் கடத்தப்படும் நாடுகளில் இந்தியாதான் முதல் நாடாக இருக்கிறது என உலக தங்கக் கவுன்சில் தகவல் தெரிவித்து இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு அதிக வரி கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த வரியில் இருந்து தப்பிக்க நகை வியாபாரிகள் வரியில்லாத தங்கத்தை வாங்குவதற்கே விருப்பம் தெரிவிக்கின்றனர். அதனால் தங்கக் கடத்தல் விவகாரங்களும் தொடர்ந்து அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா காலத்தில் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாகச் சொல்லப் பட்டாலும் இந்தியாவின் தங்க இறக்குமதி வரியும் மற்றொரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரியே செலுத்த தேவையில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு முதன் முதலாக தங்கத்தின் இறக்குமதிக்கு 1% வரி விதிக்கப்பட்டது. அடுத்து 2012 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2 % வரி விதிக்கப் பட்டது. அது ஏப்ரல் மாதத்தில் 4% ஆக அதிகரித்தது. இப்படி ஆரம்பித்த வரி அதிகரிப்பு இன்றைக்கு 12.5% அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் நிலைமை இப்படியிருக்கும்போது உலகத்திலுள்ள 90% நாடுகளில் தங்கத்தின் இறக்குமதிக்கு வரி செலுத்த தேவையில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது.

தங்கத்தை ஏழை, எளிய மக்கள் தங்களது இருப்புக்காகவும் ஆபரணத்திற்காகவும் பயன்படுத்து கின்றனர். அதுவும் இந்தியா போன்ற மதக் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் தங்கத்தின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பது இயல்புதான். உலகளவில் இந்தியாவில்தான் ஆபரணத் தங்கம் அதிகளவில் பயன்படுத்து வதாகவும் கூறப்படுகிறது. இந்திய வீடுகளில் இதுவரை 28 ஆயிரம் டன் தங்கம் இருக்கலாம் என ஒரு சர்வே தகவல் குறிப்பிடுகிறது. அதாவது மத நிறுவனங்கள், அறக்கட்டளைகள், முதலீடுகளைத் தவிர்த்து வெறுமனே ஆபரணமாகவும் இருப்பாகவும் வீடுகளில் வைக்கப் பட்டுள்ள தங்கத்தின் அளவு 28 ஆயிரம் டன்னாக இருக்கலாம் எனவும் தெரிய வருகிறது. இப்படி தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில்தான் தங்க இறக்குமதிக்கு அதிக வரியை செலுத்த வேண்டியிருக்கிறது.

தற்போது தங்க நகை வியாபாரிகள் வரியில்லா தங்கத்தை வாங்க அதிகம் விருப்பம் தெரிவிப்பதால் தங்கத்தை பல நூதன முறைகளில் கடத்திக் கொண்டு வந்து இந்திய வியாபாரிகளிடம் விற்று அதில் நல்ல லாபம் சம்பாதிக்கும் கும்பல் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. 90 களில் ஆண்டு ஒன்றுக்கு 150-200 டன் அளவிற்குக் கடத்தப்பட்ட தங்கம் தற்போது 300-400 டன்னாக அதிகரித்து இருப்பதாக உலகத் தங்க கவுன்சில் தகவல் கொடுத்து இருக்கிறது. இதுகுறித்து இந்திய நகை விற்பனைக் கழகம் கவலை தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறது. தங்கக் கடத்தலை குறைக்க வேண்டும் என்றால் வரி விதிப்பில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது இந்தியாவில் தங்கத்தை வாங்கும்போது இறக்குமதி வரி 12.5% மற்றும் ஜிஎஸ்டி 3% அதுதவிர செய்கூலி, சேதாரம் என அத்தனையும் செலுத்தியாக வேண்டும். அப்படி ஒரு 10 சவரன் தங்கம் வாங்கினால் நாம் தங்கத்தின் விலையோடு சேர்த்து வரியாக ரூ.58,500 ஐக் கொடுக்க வேண்டும். தங்கத்திற்கு அதிக மதிப்புக் கொடுக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இதுபோன்று அதிக வரி விதித்தால் மக்களின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் தற்போது அதிகமாகக் கேட்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டில் குறைந்தது இந்தியாவில் அரை கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில் 70% திருமணங்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வீட்டுத் திருமணங்கள்தான். இவர்களின் தங்கத் தேவையைத் தற்போது எப்படி பூர்த்திச் செய்வது என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

மேலும் தங்கக் கடத்தல் விவகாரம் ஒரு மாபியாவைப் போலவே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைய தொடங்கியிருக்கிறது. பெரும்பாலும் கடத்தல் கும்பலை இவர்கள் குருவிகள் என்றுதான் அழைக்கின்றனர். தங்கக் கடத்தலில் ஈடுபடும் ஏஜெண்டுகள் கொக்குகள் என்ற ரகசியக் குறியீடுகளால் அழைக்கப் படுகின்றனர். இந்த விவகாரத்தில் இந்திய அளவில் அரசு அதிகாரிகள், தூதர அதிகாரிகள், வேலையில்லா பட்டதாரிகள், சினிமா நட்சத்திரங்கள் போன்றோர் ஈடுபட்டு இருப்பதுதான் இன்னும் பெரிய தலைவலியாக மாறத் தொடங்கியிருக்கிறது. இப்படியான சட்ட விரோத செயலில் அதிகாரிகளே ஈடுபடுவதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.

தரை, விமானம், கப்பல் என 3 வழிமுறைகளிலும் இந்தியாவில் தங்கக் கடத்தல் நடப்பதாகக் கூறப்படுகிறது. இத்தங்கம் அரபு நாடுகள், தைவான், சீனா, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், பூடான் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படுகிறது எனத் தற்போது தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்து உள்ளது. இப்படி கடத்தலில் ஈடுபடும் 10 இல் 1% பேர்தான் மாட்டிக் கொள்கின்றனர். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் உயர்மட்ட அதிகாரிகளாக இருப்பதால் அவர்கள் எளிதாகத் தப்பித்து விடுகின்றனர் என்பதும் கவலை அளிக்கிறது. சட்டை, ஷூ, பெட்டி, தலை முடி, உடை, உள்ளாடை எனப் பல இடங்களில் தங்கத்தை மறைத்து எடுத்துக் கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அதிலும் ஆசனவாயில் நுழைத்துக் கொண்டு வரப்படுவதாகவும் இதில் வேலையில்லாத இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது. மரண வேதனை அளிக்கும் அத்தங்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வெளியேற்றா விட்டால் மரணம் கூட நிகழும் எனவும் கூறப்படுகிறது.

More News

பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

கடந்த சில மாதங்களாக பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவதும் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புகள் அளிக்கப்பட்டு வருவதுமான செய்திகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

வனிதா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு ஜாமீன்: கஸ்தூரி தகவல்

வனிதா திருமண விவகாரத்தில் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதாகவும் சூர்யா தேவி என்ற பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்

யாருங்க நீங்க? யூடியூப் வனிதாவுக்கு அனுப்பிய மெயில்

வனிதா, சூர்யாதேவி விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வனிதா, யூடியூபே குழப்பி போய் நிக்குது என்றும், யாருங்க நீங்க

செல்போன் ஆப், விசாவை தொடர்ந்து இப்போ இதுவுமா… கெடுபிடி காட்டும் அமெரிக்கா!!!

அமெரிக்காவின் ஹீஸ்டன் மாகாணத்தில் இருக்கும் சீனத் தூதரகம் முன்பு நேற்று முன்தினம் இரவு சில முக்கிய ஆவணங்கள் எரிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

என் வாழ்நாளில் இப்படி ஒரு பிறந்த நாளை கொண்டாடியதில்லை: யோகிபாபு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேற்று தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்; அதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.