இந்தியாவில் கொரோனா பாதிக்காத ஒரே இடம் எது தெரியுமா???

  • IndiaGlitz, [Tuesday,May 26 2020]

 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தனது முத்திரையைப் பதித்து விட்டது. இந்நிலையில் இந்தியாவின் ஒரே ஒரு யூனியன் பிரதேசத்தில் மட்டும் இன்னும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்த வில்லை. மற்ற யூனியன் பிரதேசங்களிலும் நோய்த்தொற்று ஏற்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவை ஒட்டி காணப்படுகின்ற 36 குட்டிக் குட்டித் தீவுகளின் கூட்டம்தான் லட்சத்தீவு யூனியன். இப்பகுதியில் மொத்தம் 64 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் யாரையும் இதுவரை கொரோனா நோய்த்தொற்று பாதிக்க வில்லை. அதைத்தவிர, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நாகலாந்தில் முதல் முறையாக நேற்று 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. அந்த 3 பேரும் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக நாகலாந்திற்கு சென்றவர்கள். அதேபோல சிக்கிம் மாநிலத்தில் கடந்த 23 ஆம் தேதி ஒரு மாணவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் டெல்லியில் இருந்து சிக்கிம் மாநிலத்திற்கு திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லட்சத்தீவு தவிர மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு 348,319 ஆக பதிவாகி இருக்கிறது. ஹார்வேர்டு பல்கலைக்கழகத் தரவின்படி தற்போது இந்திய கொரோனா பாதிப்பில் உலகளவில் 10 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மொத்த நோய்தொற்று 146,371 ஆகவும் உயிரிழப்பு 4,187 ஆகவும் பதிவாகியிருக்கிறது.