தண்ணீரைவிட பெட்ரோல், டீசல் அவ்வளவு விலை மலிவா? உலகையே கலக்கும் சில நாடுகள்!!!

  • IndiaGlitz, [Monday,January 11 2021]

உலகம் முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக எரிபொருள் விற்பனை இருந்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைப்பதற்காகத்தான் SAARC போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் SAARC அமைப்பில் இருந்து வரும் இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டு விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீகங்காநகரில் தற்போது பெட்ரோல் விலை ரூ.95.50 காசுக்கும் டீசல் விலை ரூ.87.46 காசுக்கும் விற்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் இதைவிட சற்று குறைவான விலைக்குக் கிடைத்தாலும் இந்தியாவை பொறுத்தவரைக்கும் பெட்ரோல், டீசல் விலை அசலை விட பன்மடங்கு அதிகமாகவே இருக்கிறது.

இதை ஒழுங்குபடுத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா நேரத்தில் பெட்ரோல் டீசலின் விலை தற்போது மேலும் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் GlobalPetrolPrices.com எனும் அமைப்பு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் விற்பனையான பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் என்ன என்பதைக் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

அதில் ஒரு சில நாடுகளில் குடிப்பதற்காக விற்கப்படும் தண்ணீரை விட மலிவான விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. அதன்படி வெனிசுலாவில் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.46 காசுக்கும் ஈரானில் அதே நாளில்ரூ.4.24 காசுக்கும் அங்கோலாவில் ரூ.17.88 காசுக்கும் விற்பனையாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் தலையை சுற்ற வைக்கும் சில நாடுகளும் இருக்கின்றன. உச்சப்பட்சமாக ஹங்கேரி நாட்டில் ரூ.169.21 காசுக்கும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் ரூ.150.29 காசுக்கும் சிரியாவில் ரூ.149.08 காசுக்கும் நெதர்லாந்தில் ரூ.140.90 காசுக்கும் நார்வேயில் 135.38 காசுக்கும் பின்லாந்தில் 133.90 காசுக்கும் இங்கிலாந்தில் 116 ரூபாய்க்கும் சுவிட்சர்லாந்தில் 115 ரூபாய்க்கும் ஜப்பானில் ரூ-93.62 காசுக்கும் ஆஸ்திரேலியாவில் ரூ.68.91 காசுக்கும் அமெரிக்காவில் ரூ.50.13 காசுக்கும் ரஷ்யாவில் ரூ.42.69 காசுக்கும் விற்பனையாகி இருக்கிறது.

இந்தியாவில் தலைநகரான டெல்லியில் இன்று பெட்ரோல் ரூ.84.20 காசுக்கும் சென்னையில் ரூ.86.96 காசுக்கும் விற்பனையாகி வருகிறது.