எட்டப்பன் பெயர் முளைத்தது எப்படி தெரியுமா??? சுவாரசியம் நிறைந்த வரலாற்றுத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
காட்டிக் கொடுக்கும் குணமுடையவர்களை நாம் எட்டப்பன் என்றே கிண்டல் செய்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கடுமையாக போராடிய கட்டபொம்மனை இந்த எட்டப்பன் காட்டிக் கொடுத்து விட்டான் என்ற வரலாறும் நமக்கு திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கப் பட்டு வருகிறது. உண்மையில் எட்டப்பன் என்ற பெயர் காட்டிக் கொடுப்பர்களை அடையாளப்படுத்து வதற்காகவே உருவாக்கப் பட்ட சொல்லா? என்ற கேள்வியும் வருகிறது. ஆனால் வீரத்தின் பெருமையை நிலைநாட்டு வதற்காக உருவாக்கப்பட்ட சொல்தான் இந்த “எட்டப்பன்” என்ற வரலாறு நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை.
திருநெல்வேலி ஜில்லாவின் உள்ள ஒரு பெரிய பாளையம்தான் எட்டயபுரம். இதை பாளையக்காரர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லாமல், அன்போடும் ஆதரவோடும் மக்களைக் காத்து வந்த எட்டயப்புர மன்னர்களை ஒட்டுமொத்தமாக பிரிட்டிஷ் ஆட்சி விழுங்கி விடவேண்டும் என கங்கணம் கட்டி வேலைச்செய்து வந்தது எல்லாம் பின்னாட்களில் நாம் அறிந்த செய்தி. இந்த எட்டயபுர மன்னர்களின் ஒருவரான குமார முத்து நாயக்கர் என்ற மன்னன் முன்பொரு காலத்தில் சந்திரகிரி பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் நல்லம நாயக்கன், இளையவன் வடலிங்கம நாயக்கன்.
இதில் மூத்தவனான நல்லம நாயக்கன் விஜய நகரத்தை ஆண்டு வந்த சம்பு மகாராஜாவை தரிசிக்க வேண்டும் என விரும்பினான். மகாராஜாவை பார்க்க வேண்டும் என்றால் விஜயநகரக் கோட்டையின் வடக்கு வாசலைக் கடந்து சென்றாக வேண்டும். வடக்கு வாசலை சோமன் என்ற மல்யுத்த வீரன் தனது தம்பிகளோடு கம்பீரமாக காவல் புரிந்து வந்தான். அந்த வாசலில் உள்ள ஒரு கோபுரத்தில் தங்கத்தால் ஆன ஒரு பெரிய சங்கிலி கட்டப்பட்டு இருக்கும். அதன் மறுமுனை சோமனின் இடது காலில் கட்டப்பட்டு இருக்கும். எதற்கு இந்த ஏற்பாடு என்றால் அரசனை சந்திக்க வரும் அனைவரும், ஏன் பாளையக்கார மன்னர்கள் முதற்கொண்டு அனைவரும் சோமனின் காலில் கட்டப்பட்டு இருக்கும் சங்கிலியை தொட்டு வணங்கி, பின்பு கீழே குனிந்துதான் போக வேண்டும். இப்படி செய்வதால் சோமனின் பெருமை நிலைநாட்டப் படுவதாகக் கருதப்பட்டது.
இந்த ஏற்பாடுகளைப் பார்த்த நல்லம நாயக்கனுக்கு கொஞ்சம் கூட பணிந்து போக இஷ்டமில்லை. சோமனோடு மல்யுத்தம் செய்ய தயாராகிறான். உடனே இவர்களைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்கின்றனர். பெருமை மிகுந்த சோமனை ஒருவன் எதிர்க்கப் போகிறான் என்றவுடன் ஒட்டு மொத்த கிராமமும் வடக்கு வாசலுக்கு வருகிறது. நல்லம நாயக்கன் சோமனோடு கடுமையாகச் சண்டை போகிறான். ஒரு கட்டத்தில் நல்லம நாயக்கன் சோமனின் தலையை கொய்ந்து வீசுகிறான். அதுவரை வீரமிக்க கோட்டை வாசலைக் காத்து வந்த சோமனின் தலை இப்போது தரையில் கிடக்கிறது. தலையை ஈட்டியால் குத்திக்கொண்டு தனது ஆடையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு நல்லம நாயக்கன் அரசனை சந்திக்க செல்கிறான்.
நடந்த காட்சிகளை கேட்ட விஜய நரக மன்னன் அதிர்ச்சிப் போகிறார். நல்லம நாயக்கனுக்கு சில கிராமங்களையும் சோமன் தலை விருதையும் வழங்கி மகிழ்கிறார் மன்னர். மேலும் சோமனை நினைவுப்படுத்தும் விதமாக மன்னனாகப் பட்டம் சூட்டிக் கொள்ளும்போது நல்லம நாயக்கன் தனது இடது காலில் பட்டத்தை அணிந்துக் கொள்ளலாம். அதேபோல சோமனை வீழ்த்தும்போது உடை முழுவதும் ரத்தமாக மாறியதால் காவி நிறம் பொருந்திய கொடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளையும் விஜயநகர மன்னன் நல்லம நாயக்கனுக்கு வழங்கி மகிழ்கிறார். மன்னன் நல்லம நாயக்கனோடு பேசிக் கொண்டிருந்தபோது சோமனின் 8 தம்பிகள் பின்னால் நின்று தேம்பிக்கொண்டு இருந்தனர். அதைப் பார்த்ததும் விஜயநரக மன்னன் இந்த பிள்ளைகளுக்கு இன்று முதல் தகப்பான இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறார். அன்று முதல் 8 பிள்ளைகளுக்கு தகப்பானகிறார் நல்லம நாயக்கன்.
விஜநகர மன்னன், நல்லம நாயக்கனுக்கு வழங்கிய பகுதிகள்தான் எட்டயபுரம் உள்ளிட்ட பாளையங்கள். அந்தப் பகுதியில் மக்கள் மகிழும்படி மிகவும் சிறப்பான ஆட்சியை நல்லம நாயக்கன் செய்து வருகிறார். அவனுடைய ஆட்சியில் இருந்த மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மன்னனிடம் அதிக மரியாதையோடும் நடந்து கொண்டனர். வயலில் விளையும் விளைச்சலை மன்னுக்கு வரியாகக் கொடுப்பது வழக்கம். அப்படி வரியாக விளைச்சலைக் கொடுக்கும்போது கூட 1,2,3,4,5,6,7, மகாராஜா, 9 என்றுதான் அளப்பார்களாம். காரணம் 8 பிள்ளைகளுக்கு அப்பன். எட்டப்பன். எனவே 8 என்ற வார்த்தையைக் கூட மக்கள் பயன்படுத்த மாட்டார்களாம். அதற்குப் பதிலாக மகாராஜா என்றே மக்கள் அழைத்து வந்தனர் என்ற வரலாற்றுத் தகவலை ஒரு வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளார்.
மன்னனை மட்டுமல்ல, மன்னனுக்குத் துணையாக இருந்த பெண்களையும் கண்ணப்பன் என்றே மக்கள் அழைத்து வந்திருக்கின்றனர். மக்களை தங்களது பிள்ளைகளைப் போல கண்களாகப் பாவித்து வந்ததால் அவர்களுக்கும் கண்ணப்பன் என்ற பெயர் வந்தது. இப்படி பெருமை மிகுந்த வீரத்தினால் வந்ததுதான் எட்டப்பன் என்ற பெயர். அத்தகைய பெருமை மிக்க வரலாற்றை நாம் எட்டப்பன் என்ற தவறான அர்த்தத்தால் ஒரு நிமிடத்தில் வீணடித்து விடுகிறோம். உண்மையில் கட்டபொம்மன் விஷயத்தில் பாளையக்காரர்கள் என்ன செய்தார்கள், ஏன் எட்டப்பன் என்ற பெயர் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது எல்லாம் தனி வரலாறு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout