16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கை வேண்டாம்: உயர்நீதிமன்றம் ஆலோசனை
- IndiaGlitz, [Saturday,April 27 2019]
16 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக நாமக்கல் இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையை நாமக்கல் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த அந்த இளைஞர், தன்னை திருமணம் செய்த பெண்ணே தான் கடத்தப்படவில்லை என்று கூறியதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, அந்த இளைஞரை விடுதலை செய்ததோடு, 16 வயதுக்கு மேல் ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.