பயமும் பதட்டமும் உங்களை வாட்டி எடுக்கிறதா? வெளிவர எளிய டிப்ஸ்!
- IndiaGlitz, [Friday,July 16 2021]
ஆப்பிள் நிறுவனத்தின் ஓனரோ அல்லது ஆப்பக்கடை வைத்திருப்பவரோ, யாராக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பயமும் பதட்டமும் இருக்கத்தான் செய்யும். அப்படி இல்லாத ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு மனித வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டே வரும் இதை எதிர்கொள்ள முடியாமல் நம்மில் பலர் கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டு இருக்கிறோம். கூடவே பிரார்த்தனை, நேர்த்திக்கடன், சோஷியம், பில்லிசூனியம் வரை லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறது.
இப்படியான பயத்தை எப்படி போக்குவது? அதோடு பதட்டப் படாமல் இருப்பது எப்படி? இதுதான் தற்போதைய கேள்வி. உண்மையில் பயம் ஒருவரின் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்றே உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தப் பயத்தை தள்ளிப்போடுவதற்கு (விலகி ஓடுவதற்கு) பதிலாக அதை எதிர்கொள்ள தயாராகிவிட்டால் பயம் காணாமல் போய்விடும் என்கின்றனர். கூடவே அவசர கதியில் நமக்கு இருக்கும் எதிர்பார்ப்புத்தான் (Anxiety) நம்மை பதட்டம் அடைய செய்கிறது எனவும் கூறுகின்றனர்.
அதனால் என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது, குறிப்பாக பயத்தை ஒத்திப் போடாமல் அதை எதிர்கொள்ளத் எப்போதும் தயாராக இருப்பது அவசியம். அதற்கான சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
சிறிய வயதில் மேடையில் பேச பயப்படுகிறோம். வளர்ந்து பெரிய மனுஷனாக ஆகிவிட்ட பின்பும் ஒரு பிசினஸ் மீட்டிங்கில் பேசப் பயப் படுகிறோம். சரி, இதெல்லாம் எனக்கு மிட்டாய் சாப்பிடுகிற மாதிரி எனச் சொல்கிற இன்னொரு நபர் இருட்டைப் பார்த்து பயப்படுகிறார். ஏன் சிலர் சாலைகளில் சென்று கொண்டு இருக்கும்போதே, முன்னால் சென்று கொண்டு இருக்கும் டேங்கர் லாரி வெடித்து சிதறினால் என்னவாகும் எனச் சிந்திக்க துவங்கி விடுகின்றனர். இப்படி சதா, சிந்தித்து சிந்தித்து எதற்கெடுத்தாலும் நொண்டி சாக்கு சொல்லவும் கற்றுக் கொள்கிறோம்.
மழையில் நனைந்தால் காய்ச்சல் வந்துவிடும் எனச் சொல்லும் நொண்டி சாக்கு ஒரு வகையில் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் தவிர்க்க முடியாத நிலைமையில்கூட நான் மழையில் நனையவே மாட்டேன். அப்படி நனைந்துவிட்டால் உறுதியாக எனக்கு காய்ச்சல் வந்துவிடும் எனப் பயப்படுகிற, நம்புகிற விஷயம்தான் ஒரு மனிதனை கோழையாக மாற்றிவிடுகிறது.
இந்த விஷயத்தில் சரி மழைதானே? நனைத்துவிட்டு போகட்டும்… ஒருவேளை காய்ச்சல் வந்தால்கூட சரிசெய்து கொள்கிறேன்… எனச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இந்த வழிமுறை மழைக்கு மட்டுமல்ல… வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் பொருந்தும்.
அதற்காக சாலையில் வரும் வண்டி, என்னை மோதிவிட்டு போனாலும் பரவாயில்லை… நான் சமாளித்துக் கொள்கிறேன் என அசட்டுத்தனமாக, logicக்கே இல்லாத விஷயத்திற்கு எல்லாம் கெத்து காட்டினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.
ஒரு மனிதனுக்கு பயம் நல்ல விஷயம் என மருத்துவர்கள் சொல்கின்றனர். காரணம் ஒரு மனிதனுக்கு பயம் இருக்கிற பட்சத்தில் எதையும் ஆழமாக கற்றுக்கொண்டு பின்னர் வாழத் துவங்குகிறான். உதாரணத்திற்கு நெருப்பு சுடும் என்பதை ஏதோ ஒரு வழியில் நாம் அனைவரும் கற்றுக்கொள்கிறோம். அந்த நெருப்பின் மீது இருக்கும் பயத்தினால் அதை எச்சரிக்கையாக கையாள்கிறோம். ஆனால் இதற்காக நான் நெருப்பையே தொட மாட்டேன். எனக்கு ஊசி போட்டுக்கொள்ள பயம். அதனால் வாழ்க்கையில் ஊசியே போட்டுக் கொள்ளமாட்டேன் என்பதெல்லாம் படு முட்டாள்தனம்.
1.தேவைக்கு தகுந்த மாதிரி அது உண்மையில் தேவையான பயம்தானா? அல்லது அநாவசியமான பயமா? என்பதைக் கண்டறிந்து அதை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எப்படி இருந்தாலும் நாம் பயத்தோடு வாழத்தான் வேண்டும். இந்த பயத்தை ஓரம்கட்டிவிட்டு எங்கும் செல்ல முடியாது. எனவே ஒரு விஷயத்தை செய்யும்போது அந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, அதைப் பொறுத்து நீங்கள் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஒருவேளை அந்த விஷயம் அடி முட்டாள்தனம். உண்மையிலேயே 20% கூட வெற்றிக் கிடைக்காது என அறிவியல் பூர்வமாகவோ அல்லது அனுபவப் பூர்வமாகவோ தெரிந்த பிறகு அதை செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றும்போது நாம் தேவையில்லாத பயத்தைத் தவிர்க்க முடியும்.
2. அடுத்து ஒரு விஷயத்தை செய்யும்போது தோற்றுப்போய்விட்டால் என்ன செய்வது என நாம் சிந்திக்கத் துவங்கிவிடுகிறோம். எனவே தோல்வியால் ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ள கற்றுக்கொள்வது அவசியம். ஒருவேளை தோல்விக்கு பயந்து எந்த முயற்சியும் செய்யாத ஒரு மனிதன், தனது இறுதிகாலம் வரை வெறுமனே இருக்க வேண்டி இருக்கும். அதனால் தோல்வியை ஏற்றுக்கொள்கிற அதில் இருந்து கற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3. அடுத்து பயத்தை மனதிற்குள் வைத்து கொண்டு இருக்கும் ஒரு மனிதனதால் எந்த முடிவையும் எளிதாக எடுக்க முடியாது. எனவே எப்பேர்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விஷயத்தை சவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே இருந்தால் பயமும் கூடவே இருக்கும். அந்த விஷயத்தில் எந்த முடிவும் கிடைக்காது. நல்லதோ, கெட்டதோ ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. ஒரு விஷயத்தை உறுதியாக முடிவெடுத்த பிறகுதான் செய்கிறோம். அப்படி செய்யும்போது ஒருவேளை அது தவறாக முடிந்தால்? இந்த கேள்விக்கு Plan B, Plan C என அடுத்தடுத்த திட்டங்களை வைத்து இருப்பது நல்லது. இப்படி அடுத்தடுத்த திட்டங்கள் இருக்கும்போது ஒரு நபருக்கு அந்த விஷயத்தைக் குறித்து பயமே இருக்காது.
5. வாழ்க்கை என்பது ஒரு அனுபவக் கூடம். சதா அதில் வெற்றியும் தோல்வியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த வாழ்க்கையை பலரும் திரும்பிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதில் இருக்கும் நெகட்டிவ் விஷயங்களை மட்டும் சொல்லிக் கொண்டு இருக்காமல் நெகட்டிவை எப்படி பாசிட்டிவாக மாற்றி இருக்கலாம். அல்லது மாற்ற முடியும் எனச் சமகாலத்திற்கு ஏற்ப சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதாவது வாழ்க்கை பாடத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படி ஒவ்வொரு பயத்தையும் எதிர்கொள்ள கற்றுக் கொண்டு விட்டால் பிரச்சனேயே இருக்காது. அதோடு நான் தோற்று விடுவேனா? நேர்காணலில் என்னை நிராகரித்து விடுவார்களா? அவர்களுக்கு என்னை பிடிக்காமல் போய் விடுமா? என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்தை பிடிக்க முடியாதா? என நம்மைச் சுற்றிக் கொண்டு இருக்கும் ஒரு கோடி பதற்றத்திற்கும் வேலை இல்லாமல் போய்விடும்.
அதாவது என்ன நடந்தாலும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். அதை ஏற்றுக்கொள்கிறேன். இன்னொரு முறை அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என தைரியமான மனநிலையை ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டுவிட்டால் அவருக்கு பதற்றம் இருக்காது, பயமும் இருக்காது. இந்த வழிமுறை ஒரு மனிதனை வெற்றியின் உச்சிக்கே கொண்டு செல்லும். அதனால் பயத்தை கண்டு பயப்படாமல் அது எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.