மூக்கு கண்ணாடி கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தருமா? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!
- IndiaGlitz, [Friday,September 18 2020]
கொரோனா பரவலைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவு என்ற கருத்தையும் தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
சீனாவின் நாஞ்சாய் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நீண்ட நேரம் கண்ணாடி அணிந்தால் கொரோனா ஆபத்தில் இருந்து தப்பிக்கக் கொள்ள முடியுமா என்பதைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். அந்த ஆய்வில் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் பொதுவாக முகத்தைத் தொடுவதை தவிர்க்கின்றனர். இந்தக் காரணத்தால் அவர்களுக்கு கொரோனா ஆபத்துக் குறைவாகவே இருக்கிறது எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சுய்ஜோ ஜெங்கு எனும் கண் மருத்துவ மனையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூக்கு கண்ணாடி அணியும் பழக்கம் கொண்டவர்கள் தொடர்ந்து 8 மணிநேரம் வரை கண்ணாடி அணிவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் பெரும்பாலும் அவர்கள் தங்களது முகத்தைத் தொடுவதை முற்றிலும் மறந்தே போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த விஞ்ஞானிகள் மேலும் இந்த விஷயத்தில் விரிவான ஆய்வு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விளக்கத்தைக் குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர், “இந்தக் கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது காண்ணடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில் ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்’‘ எனக் குறிப்பிட்டள்ளார். மேலும் கண்ணாடி கூட அசுத்தமான கைகளால் தொடும்போது அதிலும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது எனவும் அவர் சுட்டிகாட்டியிருக்கிறார்.