ஆயிரம் விளக்கு தொகுதி: எழிலனின் சர்ச்சை பேச்சால் குஷ்புவின் வெற்றி உறுதியாகிறதா?
- IndiaGlitz, [Friday,March 26 2021]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக எழிலன் போட்டியிடுகிறார். இருவரும் ஆயிரம்விளக்கு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எழிலனின் சர்ச்சைக்குரிய வாக்குறுதி ஒன்றால் குஷ்புவின் வெற்றி உறுதியாகி உள்ளதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் திமுக வேட்பாளர் எழிலன் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்து வருகிறார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ஸ்கூட்டர், 100 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்க ஊக்கத்தொகை, தொழிலாளர் நல வாரியம், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிவறை, ஆயிரம் விளக்கு தொகுதி முழுவதும் இலவச வைஃபை போன்ற அசத்தலான வாக்குறுதிகளை தொகுதி மக்களுக்கு எழிலன் அளித்தார்.
இந்த நிலையில் திடீரென அவர் போலீசார் மற்றும் பொது மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் ’பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்ற அமைப்பை மீண்டும் ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இதனால் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் தந்தை மகன் கொலை செய்யப்பட்டதற்கு ’பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பும் முக்கிய காரணம் என விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அந்த அமைப்பை தடை செய்ய டிஜிபி திரிபாதி பரிந்துரை செய்தார் என்பதும், இதனை அடுத்து தமிழக அரசு ’பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பை தடை செய்தது என்பதும் தெரிந்ததே. இதன் பின்னர்தான் பொதுமக்கள் தற்போது நிம்மதியாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ’பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பை ஏற்படுத்துவேன் என எழிலன் சர்ச்சைக்குரிய வாக்குறுதி அளித்த்தால், குஷ்புவின் வெற்றி உறுதி ஆகி விட்டதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
ஒருபக்கம் குஷ்பு மக்களோடு மக்களாக நெருங்கி பழகி வருகிறார் என்பதும் குறிப்பாக பெண்களை கவரும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் எழிலனின் இந்த சர்ச்சைக்குரிய வாக்குறுதியால் திமுகவினர்களே அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.