அடுத்த திமுக தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,August 21 2018]
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக என்னும் இயக்கத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த திமுக தலைவர் கருணாநிதி இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். இதனையடுத்து திமுக தலைவர் பதவி காலியாக இருப்பதால் விரைவில் அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் கூடுகிறது என்றும், அன்றைய தினத்தில் திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதன்படி இந்த இரண்டு பதவிகளுக்கும் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் 27ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம் என்றும், வரும் 27ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.25000 வேட்புமனு கட்டணம் கட்ட வேண்டும் என்றும், வேட்பாளர்களை ஐந்து பேர் முன்மொழியவும், ஐந்து பேர் வழிமொழியவும் வேண்டும் என்றும் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு கனிமொழியும் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.