மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர்: 'பொன்னியின் செல்வன்' படத்தை விமர்சித்த திமுக எம்பி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை பார்த்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் திமுக எம்பி திருச்சி சிவா நீண்ட விமர்சனம் எழுதி உள்ளார். அந்த விமர்சனத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கல்லூரியில் படித்த நாட்களில் இரவு பகலாக தொடர்ந்து உட்கார்ந்து ஒரே மூச்சில் படித்தது, பின்பு ஓராண்டு கால மிசா சிறைவாசத்தின்போது படித்த பல நூல்களின் வரிசையில் இ்ண்டாவது வாசிப்பு என ரொம்பவும் பரிச்சயமான மனதை விட்டு நீங்காத சரித்திர பின்னணியில் , சில கற்பனைகளோடு கல்கி அவர்களால் எழுதப்பட்ட காலமெல்லாம் நிலைத்து நிற்கக் கூடிய 'பொன்னியின் செல்வன்.
முதல் முறை படித்து முடித்த பின் அதில் வரும் பாத்திரங்கள் நெஞ்சில் நிழலாட உறக்கம் தொலைத்த இரவுகளைப் போலவே இயக்குநர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் "பொன்னியின் செல்வன்" படம் பார்த்த அன்று இரவும் உறக்கம் இழந்தேன்.
பாராட்ட வேண்டியதை இதற்கு மேல் இத்தனை பெரிய வரலாற்றுப் புதினத்தை திரையில் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்க இயலாது. எம்.ஜி.ஆர் நினைத்து, கமல்ஹாசன் விரும்பி பல காரணங்களால் உருவாக முடியாத இந்தக் காவியத்தை திரைப்படமாக்கிய மணிரத்னம் அவர்களை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாய் உணர்கிறேன்.
நூறு சதவீதம் முழுமை என்பதை எல்லாவற்றிலும் எதிர்பார்க்க முடியாது. எனக்கு தெரிந்து எழுத்து வடிவத்தில் பெரும் வரவேற்பினை பெற்ற பல கதைகள் திரையில் வெற்றி பெறாமல் போயிருக்கின்றன. அகிலன், ஜெயகாந்தன், சுஜாதா, ஏன் கல்கியும் இதற்கு விதிவிலக்கில்லை.
விமர்சனங்களை சந்திக்காத தலைவர்களும், படைப்புகளும் இருக்கவே முடியாது, ஆனால் பாராட்ட வேண்டியதை பாராட்டாமல் குறைகளை மட்டுமே சுட்டுவதை ஏற்கவும் இயலாது. திரையில் கண்ட சிலிர்ப்பு மனதில் அழுத்தமாகப் பதிந்த காரணத்தால் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, அருள்மொழிவர்மன், ஆதித்தன், குணசேகரன், ஞானசேகரன், பன்னீர்செல்வம் என எத்தனை குழந்தைகளுக்கு பெயர் சூட்டியிருப்போம். (எல்லோரையும் திரையில் கண்ட சிலிர்ப்பு இன்னும் தொடர்கிறது.) படத்துக்கு வருகிறேன்.
இயக்குநரின் திறமையும், நேர்த்தியாக இந்தக் கதையினை திரையில் மெருகு குலையாமல் கொண்டு வர வேண்டும் என்ற அக்கறையும் பாத்திரங்களின் பரிணமிப்பில் மிளிர்ந்தது. பொ.செ நேசர்கள் நாடக வடிவில் இந்த அற்புத புதினம் அரங்கேறியபோது பெரும் எதிர்பார்ப்போடு சென்று பொன்னியின் செல்வன் நேசர்கள் ஏமாந்த நிகழ்வுகள் பல உண்டு. அதில் நானும் ஒருவன்.
திரையில் வந்தியத்தேவனின், குறும்புத்தனம், திறமை, வீரம், காதல், சாமர்த்தியம் அத்தனையையும் நடிகர் கார்த்தி வெளிப்படுத்தியிருப்பது முதல் மகிழ்ச்சி, பின்னாளில் சக்கரவர்த்தியாய் பரிணமிக்க இருக்கும் இலக்கணக்கங்களை கொண்ட இந்நாள் இளவரசனாய் அருள்மொழிவர்மன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஜெயம் ரவியிடம் இத்தனை எதிர்பார்க்கவில்லை.
நந்தினி "கல்கி" வெளிப்படுத்திய அத்தனை இலக்கணங்களையும் அடக்கமாக வெளிப்படுத்தும் நடிப்பு, ஹெலன் ஆஃப் ட்ராயாய் போல், கிளியோபாட்ராவை போல், இன்றும் மனம் மயக்கும் நந்தினி போல் என்றாவது ஒருநாள் யதார்த்தத்தில் யாரையாவது காண இயலுமா என்று மனம் ஏங்கியதற்கு இதழ் மட்டும் அசைய வார்த்தை சிந்தி, உள்ளத்தில் பெரும் வைராக்கியத்தை கொண்டு, அதை வெளிக் காட்டாமல் பழுவேட்டரையரிடம் ஒரு பாவம், வந்தியத்தேவனிடம் ஒரு பாவமென நந்தினியை கண்ணெதிரே கொண்டு நிறுத்திய என்றும் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி மணிரத்னத்திற்குதான் சொல்ல வேண்டும்.
குந்தவை - த்ரிஷா இளவரசிக்கு உள்ள இலக்கணங்களோடு் சில இடங்களிலும், மனதில் மலரும் காதலை விழியால் மட்டும் காட்டி இதழ் விரிக்காமல் சிரிக்கும் குந்தவையாய் த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையராய் சரத்குமார், சின்ன பழுவேட்டரையராய் பார்த்திபன், வயது முதிர்ந்த, நோயுற்ற, அந்நிலையிலும் அரசியல் அதிகாரத்தை தன்னகத்தே உறுதியாய் வைத்திருந்த சுந்தர சோழராய் பிரகாஷ்ராஜ், மூலத்தைப் படிக்காதவர்களுக்கு அந்த பாத்திரங்களை கண்ணெதிரே கொண்டு வந்ததற்கு எத்தனை பாராட்டினாலும் தகும்.
இவர் தான் உச்சம் எல்லாவற்றிற்கும் மேலாக ஆழ்வார்க்கடியான் ஜெயராம் உச்சம். மூலக்கதையில் ஓவியர் மணியம் வரைந்ததைப் போலவே அச்சு அசலாக என்ன ஒரு யதார்த்தமான ஓப்பனை, அதற்கேற்ற நடை, அங்க அசைவுகள், பேச்சு, நடிப்பு. வார்த்தைகளே இல்லை இவரின் திறமையை பாராட்ட.
வீரமும் கோபமும் மட்டுமே குணாதாசியங்களாக கொண்ட ஆதித்த கரிகாலனாய் விக்ரம். ஏமாற்றமடையவில்லை, குறைகாணும் குணத்துடன் படத்தைப் பார்க்காத காரணத்தால். தந்தை பெரியார் சொல்வார், 'இந்த காரியத்தை என்னால் மட்டுமே ஆகும் என்று நான் செய்ததாக கருதவில்லை. வேறு யாரும் செய்ய முன்வராததால் நான் செய்கிறேன்' என்று. கொள்கை முரண் - ஜெயமோகன் அதைப்போல், பல பேரின் பலநாள் ஏக்கத்தினைப் போக்க முன்வந்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கும் இயக்குநர் மணிரத்தினத்தை என் உணர்வு கொண்டோரின் சார்பாக பாராட்ட விரும்புகிறேன்.
படம் பார்த்து நெருக்கமான சிலரோடு பகிர்ந்து கொள்வதோடு நிறுத்தாமல் இதை எழுத நேர்ந்ததற்கு பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் சில எதிர்மறை விமர்சனங்களை படிக்க நேர்ந்ததால்தான். கட்டிய வீட்டிற்கு குற்றம் சொல்ல ஆட்களுக்கா பஞ்சம்? எங்கள் கொள்கைகளுக்கு முரண்படும் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களை இந்தப் படத்தில் நான் ரசித்தேன்.
தனி மனித விருப்பு வெறுப்பு கலைப் படைப்பினில் தனி மனித விருப்பு வெறுப்புகளைக் கொண்டு பார்வையிடுவது ஏற்புடைய குணமல்ல என்பதை உணர்ந்தவன் நான். ஆனால் மணிரத்தினம் இடதுசாரி குணம் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்தப் படைப்பின் சிறப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு விமர்சனங்கள் வைக்கப்படுவதையும் பார்க்க நேர்ந்தது.
காந்தியையும், அண்ணாவையுமே விமர்சித்த உலகம் இது. எனவே இதில் விசித்திரம் ஏதுமில்லை. சிலர் கைவிட்ட முயற்சியினை, பலர் முயல முன்வராத இந்தப் பெரும் படைப்பிற்கான முனைப்பிற்கும், உழைப்பிற்கும், வெளிச்சத்திற்கு வராத தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கும் பாராட்டாமல் இருப்பதை குற்றமாய் உணர்கிறேன். இதற்கும் விமர்சனம் வரக்கூடும். அதையும் உணர்ந்தே இந்தப் பதிவு."
இவ்வாறு திமுக எம்பி திருச்சி சிவா ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை விமர்சனம் செய்துள்ளார்.
#ponniyinselvan @hasinimani @actor_jayamravi @trishtrashers @rparthiepan @realsarathkumar @Karthi_Offl pic.twitter.com/w7tSIz7iM9
— Tiruchi Siva (@tiruchisiva) October 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments