திமுகவில் சேர்ந்த பிரபல நடிகருக்கு கனிமொழி கண்டனம்
- IndiaGlitz, [Saturday,March 04 2017]
சமீபத்தில் பிரபல நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான ராதாரவி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்பு திமுகவில் சேர்ந்தார். இனி ஸ்டாலின் தலைமையில் செயல்பட உள்ளதாகவும், தமிழகத்தை தற்போதைய சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுபவர் ஸ்டாலின் மட்டுமே என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராதாரவி அ.தி.மு.க-வில் இருந்தபோது, நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் ஆகியோர்களை மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு தற்போது சமூக வலைத்தள பயனாளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக மகளிரணி தலைவியும், மாநிலங்களவை எம்பியுமான கனிமொழி மாற்றுத்திறனாளிகள் குறித்த ராதாரவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ' ராதா ரவி அவர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தலைவர் கலைஞரின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம் தான் தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள்.' என்று கூறியுள்ளார்.