சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென சந்தித்த திமுக எம்.எல்.ஏ.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Sunday,October 16 2022]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பிற்கு திமுக எம்எல்ஏ ஒருவர் உதவி செய்ததாகவும் அதன் பின் படப்பிடிப்பு தளத்தில் திமுக எம்எல்ஏ ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கடலூர் அருகே நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் காட்சி ஒன்றில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. இதற்காக புதிதாக போடப்பட்டு வரும் குருவிநத்தம் - அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
இதனை அடுத்து படக்குழுவினர் அந்த தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் அவர்களிடம் கூறியதை அடுத்து அவர் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பேசி அனுமதி பெற்றுத் தந்ததாகவும் அதன் பின்னர் அந்த சாலையில் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்தே செந்தில் குமார் அவர்களை பார்க்க வேண்டுமென ரஜினிகாந்த் விரும்பியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட செந்தில்குமார் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு வந்து ரஜினியை கேரவனில் சந்தித்து பேசியதாகவும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து படம் வெற்றி பெற வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.