திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: சென்னை மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்திலும் சென்னையிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு நேற்று சென்னையில் மட்டும் 1000ஐ தாண்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து நேற்று அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருள்களை ஜெ.அன்பழகன் அவர்கள் தானே நேரில் வழங்கி வந்தார் என்பதும், கொரோனா தொற்று அதிகமாக இருந்த பகுதிகளிலும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களோடு மக்களாக அவர் பழகி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், அரசியலில் மட்டுமின்றி திரையுலகிலும் பிரபலமானவர் என்பதும், இவர் ஜெயம் ரவி நடித்த ‘ஆதிபகவன்’ என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பதும் ஒருசில படங்களை விநியோகம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது