ரஜினியிடம் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த பிரபல அரசியல் தலைவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் திடீரென படக்குழுவினர் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே.

ரஜினிகாந்த் உள்பட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் ரஜினிக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லை என்றும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது திமுகவுக்கு தான் பெரும் பாதிப்பாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து முகஸ்டாலின் தொலைபேசி மூலம் விசாரித்தது அரசியல் மாண்பாக கருதப்படுகிறது.