திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை… யாருக்கு முன்னுரிமை?

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது வேட்பாளர் மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 க்கும் மேற்பட்ட மெகா கூட்டணியுடன் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் திமுக 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. அதோடு பல்வேறு அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையையும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். முன்னதாக மெரினா பீட்சில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியிட்டார்.

அதில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை.

அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்பு புகார் மாதம்தோறும் நடத்தப்படும்.

“பொங்கல்” மாபெரும் பண்பாட்டு நாளாக கொண்டாடப்படும்.

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்.

சத்துணவு அங்கன்வாடி அரசுப் பணியாளர்களாக மாற்றப்படும்.

தமிழ்நாடு ஆறு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

பத்திரிக்கையாளர்களுக்கு தனி ஆணையம், ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்.

வேலையில்லா பட்டதாரிகள் தொழில் தொடங்க 20 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

கனிமங்கள் தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.

திருச்சி, சேலம், கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்.

கல்வியை மாநிலப் பட்டியலில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

பழங்குடியின பட்டியலில் மீனவ சமுதாயம் சேர்க்கப்படும்.

ஏழை மக்கள் பசி போக்க 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.

சொத்துவரி அதிகரிக்கப்படாது.

மகப்பேறு விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.

அதிமுக அரசால் ஏற்பட்டுள்ள கடன் சுமையை குறைக்க பொருளாதார குழு அமைக்கப்படும்.

சென்னை பெருநகர் வெள்ளத்தடுப்பு குழு ஏற்படுத்தப்படும்.

இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு ஏற்படுத்தப்படும்.

அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, கட்டணமில்லா பயணம் ஏற்பாடு செய்யப்படும்.

புகழ்பெற்ற இந்து தலங்களுக்கு செல்ல மானியம்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த அரிசி அட்டை தாரர்களுக்கு 4,000 வழங்கப்படும்.

சமையல் எரிவாயுவுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.

மின் கட்டணம் மாதாமாதம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும்.

இந்து ஆலயங்களில் புணரமைக்க 1,000 கோடி ஒதுக்கப்படும்.

என்பது போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கு “திட்டங்கள் செயலாக்கத்துறை” என்ற தனித்துறை அமைக்கப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.