தேமுதிக கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர்.. விஜயகாந்த் பதவியில் யார்?
- IndiaGlitz, [Thursday,December 14 2023]
விஜயகாந்த் அரசியல் கட்சியை தொடங்கியது முதல் அவர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. இதையடுத்து அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் எல்கே சதீஷ் ஆகிய இருவரும் தான் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்து வந்ததாக கூறப்பட்டது.
விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாததால் அவருடைய கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் இன்று தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடிய நிலையில் அதில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளரராக பிரேமலதா நியமிக்கப்படுவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரேமலதா பொதுச்செயலாளர் பதவியை ஏற்று, தொண்டர்கள் மத்தியில் உரையாடினார்.
ஆனால் அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் விஜயகாந்த்துக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தேமுதிக பொருளாளராக இருந்த பிரேமலதா, தற்போது பொதுச்செயலாளர் ஆகியுள்ளதை அடுத்து அக்கட்சியின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.