யாராவது இந்த கேள்வியை கேட்டால் கன்னத்தில் பளாரென அறையுங்கள். பிரேமலதா விஜயகாந்த்
- IndiaGlitz, [Tuesday,May 02 2017]
ஜெயலலிதாவின் மர்ம மரணம், கருணாநிதியின் உடல்நிலை, சசிகலா-தினகரன் ஜெயில், அதிமுகவில் பிளவு என தமிழகம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பில் இருந்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இவை குறித்து பெரிதாக எந்தவித விமர்சனமும் செய்யாதது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகமிழக்க செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மே தின விழா கூட்டம் ஒன்று தேமுதிக சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கேப்டன் கலந்து கொள்ளும் கூட்டம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டர்கள் குவிந்திருந்தனர். ஆனால் தொண்டர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் மிகச்சில நிமிடங்கள் மட்டுமே விஜயகாந்த் பேசினார்.
ஆனால் இதை ஈடுகட்டும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் நீண்ட நேரம் ஆக்ரோஷமாக பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். குறிப்பாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவர் பேசியபோது, ' ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைப் பற்றியோ, கருணாநிதியின் உடல்நிலையைப் பற்றியோ கேட்க தைரியமில்லாதவர்கள், கேப்டனின் உடல்நிலையைப் பற்றி மட்டும் கேட்கிறார்கள். இப்போது தொண்டர்களிடத்தில் நான் ஒரு முக்கியக் கோரிக்கை வைக்கிறேன். இனி யாராவது உங்களிடத்தில் விஜயகாந்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது எனக் கேட்டால், அவர்களுடைய கன்னத்திலேயே பளாரென ஒரு அறை விடுங்கள். நம்முடைய கேப்டன் 100% சிறப்பாக, சூப்பராக, ஃபிட்டாக சிங்கம்போல வந்து இங்கு அமர்ந்துகொண்டிருக்கிறார் என பிரேமலதா பில்டப் கொடுத்து பேசினார்.