தடுப்பூசி போட அடம்பிடிக்கும் நோவக்… பகீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Tuesday,February 15 2022] Sports News
செர்பிய நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் போட்டியில் கலந்துகொள்ள முயற்சித்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது இதுகுறித்து பேசியுள்ள அவர் எதிர்காலத்தில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அதற்காக பல கோப்பைகளை இழக்கவும் தயாராக இருக்கிறேன் என அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உலகத்தர வரிசையில் முதல் இடத்தில் இருந்துவரும் செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் அடிப்படையில் ஆங்கில மருத்துவத்தை விரும்பாதவர் என்ற ஒரு கருத்துக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் தெரியாத நிலையில் முன்னதாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் இருந்தே விலகினார். மேலும் தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற்றிருக்கிறேன் என்பது போன்ற ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அதிலும் தோற்றுப்போனார்.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல. ஆனால் தனி நபருக்கான உரிமையை ஆதரிக்கிறேன். எனது சிறுவயதில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டேன். ஆனால் உங்கள் உடலில் நீங்கள் எதை செலுத்திக் கொள்ளவேண்டும் என்று தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன்.
மேலும் இதற்காக எதிர்காலங்களில் கோப்பைகளை இழக்கவும் தயாராக இருக்கிறேன். அதுதான் நான் கொடுக்கும் விலையாக இருக்கும் என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.