தியா: தாய்-மகள் இடையே நடக்கும் த்ரில் விளையாட்டு
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகை சாய்பல்லவியின் முதல் தமிழ் படம், தேவி' படத்திற்கு பின்னர் மீண்டும் த்ரில் கதையம்ச களத்தில் இறங்கியிருக்கும் இயக்குனர் விஜய்யின் அடுத்த படம், லைகா நிறுவனத்தின் அடுத்த படம் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய 'தியா' திரைப்படம் ரசிகர்களை கவருமா? என்பதை பார்ப்போம்
படிக்கும் வயதிலேயே நாக செளரியாவை காதலித்து நெருக்கமாக பழகும் சாய்பல்லவி கர்ப்பமாகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரின் குடும்பத்தினர்களும் இருவரும் படித்து முடித்து செட்டிலாகும் வரை ஒருவரை ஒருவர் பார்க்க கூடாது என்றும், ஐந்து வருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாகவும் உறுதி கூறுகின்றனர். சாய்பல்லவின் கர்ப்பத்தையும் அவருக்கே தெரியாமல் கலைத்து விடுகின்றனர்.
இந்த நிலையில் சொன்னபடியே ஐந்து வருடங்கள் கழித்து நாகசெளரியாவுக்கும், சாய்பல்லவிக்கும் திருமணம் ஆகிறது. திருமணம் முடிந்த பின்னர் இரண்டு குடும்பத்திலும் திடீர் திடீரென மரணங்கள் நிகழ்கின்றனர். முதலில் நாகசெளரியா அப்பா, பின்னர் சாய்பல்லவி அம்மா, அதன் பின்னர் அவருடைய மாமா பின்னர் குடும்ப டாக்டர் என அனைவரும் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்களை கோர்வையுடன் யோசித்து பார்க்கும் சாய்பல்லவிக்கு கொலையாளி யார் என்பதும், கொலையாளியின் அடுத்த குறி தனது கணவர் நாக செளரியாதான் என்பதும் தெரிந்து விடுகிறது. கணவர் நாகசெளரியாவை அவர் காப்பாற்றினாரா? எப்படி காப்பாற்றினார்? என்பதுதான் மீதிக்கதை
சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படம். நல்ல எண்ட்ரிதான். அவரது கேரக்டருக்கு நடிப்பதற்கும் நல்ல வாய்ப்பு. தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் அமைதியான கேரக்டர். கொலையாளி யார் என்று தெரிந்தவுடன் கணவரை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சி, தவிப்பு ஆகியவற்றில் நடிப்பு ஓகே
நாகசெளரியா இன்னொரு அழகான தமிழ்ப்பட ஹீரோ. இருப்பினும் இந்த படத்தில் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை. கொடுத்த வாய்ப்பை சரியாக செய்துள்ளார். தியாவாக வரும் சிறுமி வெரோனிகாவை படம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் உட்கார வைத்துள்ளார்கள். அதை தவிர அந்த சிறுமிக்கு வேறு வேலை இந்த படத்தில் இல்லை. அவர் பேசும் ஒரே வசனம் 'அம்மா' என்பதுதான்
ஆர்ஜே பாலாஜி சிரிப்பு போலீசாக அறிமுகமாகி கடைசியில் சீரியஸ் போலீசாக மாறுகிறார். இவரது கேரக்டர் படத்தில் ஒட்டவே இல்லை. நிழல்கள் ரவி, ரேகா, சந்தானபாரதி ஆகியோர்களுக்கு சிறுசிறு கேரக்டர்கள். கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் ஒரு பாடல் ஓகே. படத்தில் பெரிய சஸ்பென்ஸ், திருப்புமுனை எதுவும் இல்லாததால், பின்னணி இசையும் சுமார்தான். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தனது வேலையை அருமையாக செய்துள்ளார். அந்தோணியின் படத்தொகுப்பும் ஓகே ரகம்
இயக்குனர் விஜய், ஒரு த்ரில் படத்திற்கே உண்டான சஸ்பென்ஸ், திருப்பம் என எதுவுமே இல்லாமல் நேர்கோட்டில் படத்தை நகர்த்தி செல்கிறார். படம் பார்க்கும் ஆடியன்ஸ்களுக்கு இரண்டாவது ரீலிலேயே கொலையாளி யார் என்பதை சொல்லி விடுகிறார். ஏன் என்பதை இடைவேளையில் சொல்லி விடுகிறார். அந்த சஸ்பென்ஸை அவர் கடைசி வரை காப்பாற்றியிருந்தால் ஒரு நல்ல த்ரில் படம் ஆடியன்ஸ்களுக்கு கிடைத்திருக்கும்.. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை மிக எளிதில் ஊகித்துவிடும்படியான சாதாரண திரைக்கதை படத்தின் மிகப்பெரிய மைனஸ். இருப்பினும் கடைசியில் சொல்லும் மெசேஜ், இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒன்று என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் சாய்பல்லவியை தமிழ்ப்படத்தில் பார்த்து ரசிக்க நினைப்பவர்கள், அம்மா-மகள் செண்டிமெண்டை ரசிப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.
Comments