ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான்.. ஆனால்: திவ்யா சத்யராஜ் அறிக்கை..!

  • IndiaGlitz, [Saturday,March 02 2024]

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னை ஒரு அரசியல் கட்சி அழைப்பு விடுத்தது உண்மைதான் என்றும் ஆனால் நான் அந்த கட்சியில் இணையவில்லை என்றும் விரைவில் அரசியல் கட்சியில் இணைவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் தெரிவித்து வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம்! எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று சில பத்திரிகை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். அதற்குப் பிறகு எல்லோரும் என்னைக் கேட்கும் கேள்விகள் நீங்கள் எம்.பி.ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்.பி ஆகனும்கற ஆசை இருக்கா? மந்திரி பதவி மேல் ஆர்வம் உள்ளதா? சத்யராஜ் சார் உங்களுக்கு பிரச்சாரம் செய்வாரா? இப்படிப் பல கேள்விகள்.

நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நான் களப்பணிகள் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது. 'மகிழ்மதி இயக்கம்' என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை. எந்தக் கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். புரட்சித் தமிழன், தோழர் சத்யராஜின் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும், தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன். நன்றி! வணக்கம்!