ஊரடங்கின்போது சைக்கிளில் ரெய்டு நடத்திய பெண் கலெக்டர்!
- IndiaGlitz, [Monday,January 10 2022]
கொரோனா அதிகரிப்பைக் கட்டுப்படுத்த நேற்று தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மிதிவண்டியில் பயணம் செய்து கண்காணிப்புப் பணிகளை ஆய்வுசெய்துள்ளார்.
முன்னதாக காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பொதுபோக்குவரத்து அல்லது எரிபொருள் சாராத வாகனங்களில் பயணம் செய்யுமாறு தமிழகஅரசு கேட்டுக்கொண்டது. இதனால் பல மாவட்டக் கலெக்டர்கள் மதிவண்டியில் பயணம் செய்து அலுவலகம் வந்தனர். ஒருசிலர் பொது போக்குவரத்தையும் பயன்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையம், வடக்கு ராஜவீதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை போன்ற இடங்களில் காவல் துறையினரின் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் இளைஞர்கள் ஒருசில இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்ததைக் கவனித்த ஆட்சியர், அவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து அணியுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 5 கி.மீவரை சைக்கிளில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த காவல் துறையினரைச் சந்தித்து அவர்களுடன் ஆலோனையும் நடத்தியுள்ளார். இதையடுத்து கலெக்டர் கவிதா ராமுவின் இந்தச் செயல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகப் பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.