நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கோள்… சீதோஷ்ணம் குறித்து சுவாரசியத் தகவல்!
- IndiaGlitz, [Friday,June 11 2021]
பூமியில் இருந்து 90 ஒளியாண்டு தொலைவில் உள்ள புதிய கோள் TOI-1231b ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோள் பூமியை விட கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் பூமியைப் போன்றே புதிய கோளிலும் சீதோஷ்ண நிலை இருக்கலாம் என்றும் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம் வானியல் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அப்படியொரு ஆய்வில் தற்போது பூமியை விட பெரிய கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கோள் பார்ப்பதற்கு நெப்டியூன் போன்றே இருப்பதாகவும் அந்த கோளில் நீர் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.
அதோடு புதிய கோளில் குளிர்ச்சி தன்மை பொருந்தி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறும் நாசா விஞ்ஞானிகள் ஏறக்குறைய பூமியை ஒத்த சீதோஷ்ண நிலையை அந்த கோளில் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் வெளியிட்டு உள்ளனர். நாசா விஞ்ஞானிகள் புதிய கோள் கண்டுபிடித்ததை அடுத்து உலக விஞ்ஞானிகள் பலரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் புதிய கோள் குறித்த ஆய்விலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.