முரட்டு குத்துக்கு எதிராக கொந்தளித்த இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,May 08 2018]

கடந்த வாரம் வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு இளைஞர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்ததோ, அதற்கு மேல் பல மடங்கு இந்த படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. குறிப்பாக திரைத்துறையினர்களே இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் உள்பட பலர் இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இன்று இயக்குனர் விஜய்மில்டனும் இந்த படத்திற்கு எதிராக கொந்தளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: 

இருட்டு அறையின் முரட்டு குத்து' படத்தின் ஸ்னீக் பீக் என்னும் முன்னோட்டக் காட்சியைப் பார்த்தபோதே இந்தப் படம் ஓடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. எனக்கே கஷ்டமாக இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் எனக்கே இந்தப்படம் ஓடக்கூடாது என்று தோன்றுவது எவ்வளவு கேவலமான விஷயம்.

என்னுடைய படம் ரிலீஸ் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, கூட வரும் படங்களாக இருந்தாலும் மற்ற படங்களாக இருந்தாலும் ஏன் எந்தப் படமாக இருந்தாலும் ஓடினால்தான் சினிமா துறைக்கு நல்லது. ஒவ்வொரு தோற்கிற படத்திற்குப் பின்னாடி, ஒவ்வொரு ஜெயிச்ச படத்திற்கு இருக்கும் அதே அளவு உழைப்பும், வியர்வையும், கனவும் இருக்கிறது.

முன்னோட்டக் காட்சி ஏதோ போகிற போக்கில் பண்ணதில்லை. அதைப் பார்க்கும் போதே ஒற்றை வார்த்தையை மையமாகக் கொண்டுதான் முன்னோட்டக் காட்சியை வடிவமைத்திருக்கிறார்கள். மிகத் தெளிவாக தாங்கள் செய்வது இன்னதென்று தெரிந்து செய்திருக்கிறார்கள். அந்த தைரியம் பயத்தைக் கொடுக்கிறது.

யாரோ முன்ன பின்னே தெரியாத ஒருத்தர் பண்ணியிருந்தால் கூட பரவாயில்லை. மிகவும் மதிக்கக்கூடிய சினிமா துறையில் முக்கியமான ஒருவர் இப்படத்தைத் தயாரித்திருப்பதால் அது மற்றவர்களுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. அவர்கள் சொல்லித்தான் 'ஏ' படம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் தப்பில்லை. ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், இப்படிப் படமெடுத்தால்தான் ஓடும் என்று நினைத்து சிலர் படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்'' இவ்வாறு இயக்குனர் விஜய் மில்டன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.