அஜித், விஜய் பட இயக்குனருக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

அஜித் நடித்த ’கிரீடம், விஜய் நடித்த ’தலைவா’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய். இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கொரொனா வைரஸ் பரபரப்பு முடிந்த பின்னர் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபாலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து ஐஸ்வர்யா என்ற பெண்ணை விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மனைவி ஐஸ்வர்யா கர்ப்பமான நிலையில் இன்று காலை அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை இயக்குனர் விஜய்யின் சகோதரரும் நடிகருமான உதயா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ’நான் இப்போது பெரியப்பா ஆகிவிட்டேன். ஆம், இயக்குனர் விஜய் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கோலிவுட் திரையுலகினர் இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.