ஆஸ்கார் கிடைக்கவில்லை என்றாலும் அனுபவம் கிடைத்தது. வெற்றிமாறன்

  • IndiaGlitz, [Monday,December 19 2016]

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 'விசாரணை' திரைப்படம் தேசிய விருதுகளை அள்ளியது மட்டுமின்றி இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கும் கலந்து கொண்டது. இந்த படம் ஆஸ்கார் வெல்லும் என்று இந்தியர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது

இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியபோது, 'விசாரணை' திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் அதன் மூலம் கிடைத்த அனுபவம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது. ஆஸ்கார் விருதுப் போட்டியில் கலந்து கொண்டது எங்கள் கண்களை திறந்துள்ளது. திறமையான பல திரைத்துறை நபர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. உலகப்புகழ் பெற்ற இயக்குனரான வெர்னர் ஹெர்சாக், 'விசாரணை' படத்தை பார்த்துவிட்டு பாராட்டியது மறக்க முடியாத ஒரு தருணம். தனுஷும்,அவருடைய வொண்டர்பார் நிறுவனமும் இல்லை என்றால் இது எல்லாம் சாத்தியமே இல்லை' என வெற்றிமாறன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்

'இந்தியாவின் சார்பில் ஒரு சர்வதேச மேடையில் பங்கேற்றது பெருமைக்குரிய விஷயமாக கருதுவதாகவும், ஆஸ்கார் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வு பெற்ற 9 படங்களும் தரமான படங்கள்' என்றும் அவர் மேலும் கூறினார்.