காஷ்மீர் அரசியல் பேசாமல் ஒரு சார்பாக கடந்து போகும் திரைப்படம்: 'அமரன்' குறித்து வசந்த பாலன்..!

  • IndiaGlitz, [Saturday,November 09 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் பாராட்டு தெரிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் ஆன பின்னர் தற்போது இந்த படத்திற்கு சில எதிர்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பாக ஒரு அரசியல் கட்சி இந்த படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் ’அறம்’ பட இயக்குனர் கோபி நயினார் தனது சமூக வலைத்தளத்தில் ‘அமரன்’ படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தற்போது இயக்குனர் வசந்த பாலன், அதே போன்ற ஒரு விமர்சனத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறுகிறப்பதாவது:

ராணுவம் மற்றும் யுத்தம் சம்மந்தமான திரைப்படங்களைக் காண்பது எனக்கு பெரும் அயர்ச்சியையும் மனசோர்வையும் தரும். கொத்து கொத்தான மரணங்களையும், வெடிகுண்டு வெடித்து மனித உடல் துண்டாவதையும் படம் முழுக்க காண்பது வாழ்க்கை குறித்த பயத்தை அதிகரிக்கும். ஆகவே அதை காண்பதை தவிர்ப்பேன். விமர்சனரீதியாக மரியாதைக்குரிய திரைப்படமாக மாறினால் மட்டுமே மனதைத் திடப்படுத்திக்கொண்டு பார்க்க முயல்வேன்.

காஷ்மீர் தீவிரவாதம் குறித்த ராணுவத் திரைப்படங்களில் அங்கு உண்மையாக நிலவும் காஷ்மீர் அரசியலை பேசாமலே அல்லது ஒரு சார்பாக பேசியே திரைப்படங்கள் கடந்து போகிறது என்கிற வருத்தமும் எழும்.அரசியலைப் பேசிய ஒன்றிரண்டு திரைப்படங்கள் இருக்கின்றன.ஆனால் அவை பெரும் கவனம் பெறாமலே போய் விட்டன.சென்றாண்டு காஷ்மீருக்கு படப்பிடிப்பு சென்ற சில தினங்களில் ஆப்பிளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமல் ஆப்பிள் பயிரிடும் விவசாயிகள் திண்டாடுவதை அறிந்தேன்.இப்படி காஷ்மீர் பற்றிய பல கேள்விகள் மனதில் சுழன்றடித்தவண்ணம் இருக்கின்றன.

அதனால் அமரன் திரைப்படத்தின் அறிவிப்பில் இருந்தே அந்த திரைப்படத்தைக் காணவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு உருவாகாமலே இருந்தது. முன்னோட்டம் சிறப்பாக இருந்தது இருப்பினும் என் முதல் சாய்ஸ் அமரன் இல்லை என்கிற முடிவோடு தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டேன். தீபாவளி அன்று காலையில் இருந்தே அமரன் பற்றிய நல்லவிதமான விமர்சனங்கள் என்னைச் சுற்றி பட்டாசாக வெடித்தவண்ணம் இருந்தது, பார்க்கலாமே என்று முயற்சித்தால் ஞாயிறு வரை முன்பதிவிலே அத்தனை காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
நேற்று தான் சென்னை வந்து அமரன் படத்தைப் பார்த்தேன். காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படாமலே தான் இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே. நிஜ ராணுவ வீரர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு என்பதாலா?

சரி படத்திற்கு வருவோம். சாய் பல்லவி என்ற நடிப்பு ராட்சசி “முகுந்தே! முகுந்தே!!” என்று உருகி அழுது பேசும் வார்த்தைகள் மனதிற்குள் திரும்ப திரும்ப எதிரொலி போல கேட்டுக்கொண்டே இருக்கிறது. படம் பார்க்கும் திருமணமானவர்களுக்கு தங்களின் இணையரின் நினைவு வருவதை தவிர்க்கமுடியவில்லை. ரசிகனை தூண்டில் போட்டு திரைக்குள் சாய் பல்லவி தன் நடிப்பால் தன் ஆளுமையால் தன் பேரழகால் இழுத்து விட்டாள் என்பது தான் உண்மை. “எங்கட நாட்டுல சேட்டான்னு அண்ணனை மட்டுமில்ல புருஷனையும் அப்டி தானே விளிப்போம் சேட்டா!” என்று காதலோடு துள்ளலோடு ஒரு அழகுமானாக ஓடிச் செல்லும் போது நானும் அவள் பின்னால் படத்திற்குள் நுழைந்து விட்டேன்.

பிரிவின் துயரை சாய் பல்லவி ஒவ்வொரு பிரேமிலும் மிக மிக நுணுக்கமாக அழுத்தமாக சப்தமாக பதிவு செய்துள்ளார். தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரை சங்க இலக்கியம் பாடித் தீர்க்கும் அது போன்ற துயரை சாய்பல்லவி உணர்ந்து ஆன்மாவை வெளிக் கொணர்ந்துள்ளதை அழகாக படம் முழுக்க காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

ஒரு விமானத்திலிருந்து இன்னொரு விமானம் மாறுகிற சில மணி நேரங்களில் மட்டுமே ராணுவ வீரனுக்கு தன் குடும்பத்தைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் அப்படியொரு காட்சியில் மனைவியின் தோளில் சாய்ந்து சிவா தூங்கும் காட்சி ரசிகர்களின் மனங்களை உலுக்குகிற காட்சி.அற்புதம்.

மனைவியிடம் போன் பேசிக் கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கத் துவங்கும் அந்த பக்கம் தொடர்பில் சாய் பல்லவிக்கு துப்பாக்கி தோட்டாக்களின் சப்தமும் மரணஓலமும் கேட்டவண்ணம் இருக்கும். அந்த காட்சியில் யுத்தத்தின் பதட்டத்தை சாய் பல்லவி முகுந்தே முகுந்தே என்று கத்தி கூச்சலிட்டு அழுது புலம்பி நடந்து ஆஹா ஆஹா அற்புதமான குறும்படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.அது ஒரு குறும்படம் என்று என் உதவியாளர்கள் சொன்னார்கள்.ஆகச்சிறந்த காட்சி.

எதிர்பாராமல் முன் அறிவிப்பு இல்லாமல் சிவா வீட்டுக்கு வரும் காட்சியில் சாய் பல்லவி காதலையும் அன்பையும் ஏக்கத்தையும் உடலெங்கும் சுமந்து கொண்டு ஓடி தவ்வி அவனைக் கட்டியணைக்கிற காட்சி உண்மையில் அவளின் காதலின் தீவிரம், பிரிவின் ஆழம், ஏக்கம் அத்தனையையும் வெளிப்படுத்திவிட்டது.

குறுந்தொகையின் பல பாடல்களில் காண்கிற வரிகள் நினைவுக்கு வந்தன. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற வரியை ராணுவ வீரர்கள் கோரஸாக பாடும் போது திரையரங்கு கை தட்டி மகிழ்ந்தது.

சிவா முதன்முதலாக சிவா என்று தெரியாமல் முகுந்தாக தெரிந்தது அவர் நடிப்பின் இன்னொரு பரிமாணம்.அவர் உடலைக்கூட்டி குறைத்து பனி பிரதேசத்தில் ஓடி சண்டையிட்டு நிஜ முகுந்தை மற்றும் நிஜ ராணுவ வீரனை கண்முன் நிறுத்தியுள்ளார்.

ஜீவி தன் பின்னணி இசையால் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை ரசிக மனங்களுக்குள் நுழைய செய்து திரையிலிருந்து அவர்களின் கவனம் சிதறாதவாறு அற்புதமான இசையமைத்துள்ளார்.

இயக்குநர் உட்பட்ட மொத்த குழுவுக்கும் என் வாழ்த்துகள்