'நேர்கொண்ட பார்வை' படம் பார்த்து குற்ற உணர்ச்சி ஏற்பட்டது: பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி ஆறாவது நாளான இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த ஆதரவு குறிப்பாக பெண் ரசிகைகளிடம் இருந்து கிடைத்த ஆதரவு அபாரமானது. பொள்ளாச்சி உள்பட பல பாலியல் சம்பவங்கள் நடக்கும்போது ஒருசிலர் பெண்களை குற்றங்கூறி வரும் நிலையில் 'நோ மீன்ஸ் நோ' என அழுத்தமாக கூறி அவர்களுடைய வாயை அடைக்கும் படமாகவும் இது அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது;
பிங்க் திரைப்படம் வெளியான நாளிலிருந்து நான் செல்லும் திசையெங்கும் அதனைப்பற்றி பேசியிருக்கிறேன். புகழ்ந்திருக்கிறேன். ஒரு திரைப்படம் என்ன செய்யும்? சமுதாயத்திற்கு என்ன செய்து விடமுடியும் என்கிற சமூகத்தின் கேள்விகளுக்கு நோ என்கிற பதிலை திரைப்படம் பெண்கள் சார்பாக சொல்லமுடியும் என்று ஆணித்தரமாக நிருபித்த திரைப்படம்.
டெல்லி மற்றும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு என் சுற்றியுள்ள சமூகம் பெண்கள் மீது தான் பழி சொற்களை உதித்த வண்ணம் இருந்தது. அதற்கு சரியான பதில் “நோ”. இந்திய சமூகத்தின் பண்பாட்டு தளத்தின் மீது ஏறி உரக்க அதன் கறைகளை களைகிற ஒரு சொல்.
இந்த திரைப்படம் தமிழில் அதுவும் அஜீத்குமார் அவர்கள் நடிக்க தயாராகப்போகிறது என்ற செய்தியை அறிந்தேன். நல்ல முயற்சி தான் ஆனால் அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யும் என்கிற கேள்வி இருந்தது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் முன்னோட்டத்தில் சண்டைக்காட்சியை பார்த்த போது இயக்குநர் விநோத் அவர்கள் இதை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்று அறிய ஆர்வமானேன். வேலைப்பளு காரணமாக நேற்றிரவு தான் படத்தைப்பார்த்தேன்.
வீட்டு உரிமையாளரை, அந்த பெண்களை தொந்தரவு செய்யும் பணபலம் மற்றும் அதிகார பலம் படைத்த கும்பல் வக்கீலையும் தொந்தரவு செய்யும் தானே? அப்படி தொந்தரவு செய்கையில் ஒரு சண்டைக்காட்சி வரும் தானே. அஜீத் அவர்களுக்காக செய்த திணிப்பின்றி மிக சரியாகப் பொருந்துகிறது. திரையில் ரசிகர்களின் விசில் பறக்கிறது. பிங்க் படத்தை பலமுறை பார்த்த போதும் நமக்கு ஏன் இந்த இடம் தோணாமல் போனது. ரீமேக் ஆகிறது என்ற போதும் எல்லோரையும் போல நாமும் ஏன் சந்தேகக் கண்களுடன் பார்த்தோம் என்ற குற்ற உணர்ச்சியும் தாழ்வு மனபான்மையும் ஏற்பட்டது.
வித்யா பாலன் எத்தனை அழகு, பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றியது. இன்னும் சில காட்சிகளுக்கு மனம் ஏங்கியது.வித்யாபாலனுக்கு ஒரு கதை எழுதவேண்டும் என்று மனம் அடித்து கொண்டது,டர்ட்டி பிக்சர் படத்திலிருந்து வித்யாபாலனின் அபிரிமிதமான நடிப்பை நான் வியந்து பின் தொடர்ந்து இருக்கிறேன்.என்ன அபாரமான நடிகை.மிக தாமதமாக தான் திரையுலகில் நுழைந்தார். காலம் இன்னும் இருக்கு என் கைகளில்,பார்க்கலாம்.
தொடர்ந்து கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த அஜீத் இது போன்ற படங்களிலும் நடிக்க முன்வருவது மிக ஆரோக்கியமானது. சிறப்பானது. பாராட்டுக்குரியது.இயக்குநர் விநோத் அவர்களுக்கு என் பாராட்டுகள்” .
இவ்வாறு இயக்குனர் வசந்தபாலன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments